திமுக ஆட்சியில் இரு மடங்கு கடன்! தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்!
தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, "மாநிலத்தின் உண்மையான நிதி நிலைமை குறித்துப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்" எனப் பதவியேற்பின் போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை மற்றும் தற்போதைய கடன் உள்கட்டமைப்பு குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை (White Paper on Tamil Nadu Finance) சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தற்பொழுது முறைப்படி வெளியிட்டுள்ளார். இந்த வெள்ளை அறிக்கை முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் நிதிப் போக்கைக் கடுமையாகச் சாடும் வகையில் அமைந்துள்ளது.
வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நிதி அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2021-ஆம் ஆண்டில் முந்தைய அதிமுக ஆட்சியின் முடிவில் மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமார் ரூ.5 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் வரம்பு எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி இரு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநில அரசின் நேரடிக் கடன் மட்டும் ரூ.10 லட்சம் கோடியாக அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. இது தவிர, மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் (PSUs) கடன்களையும் சேர்த்தால், தமிழகத்தின் உண்மையான ஒட்டுமொத்தக் கடன் தொகை ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உயர்ந்து நெஞ்சை உலுக்குகிறது என்று தெரிவித்தார்.
மாநிலத்தின் நிதி ஆதாரங்கள் முடங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகபட்சமாக ரூ.78,324 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த அதீதக் கடன் சுமையின் காரணமாக, தமிழக அரசு வாங்கிய கடன்களுக்காக ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வெறும் வட்டி மட்டுமே செலுத்தி வருகிறது. இதனால், புதிய உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான மூலதனச் செலவுகள் (Capital Expenditure) பெருமளவில் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முந்தைய அரசின் தவறான நிதி மேலாண்மை மற்றும் போதிய வருவாய் பெருக்கமின்மையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!
இந்த வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபர் மீதும் தற்பொழுது தலா ரூ.1,28,934 கடன் சுமை திணிக்கப்பட்டுள்ளது என்று நிதித் துறை கவலை தெரிவித்துளளது. தவெக அரசுப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படவுள்ள புதிய முழுமையான பட்ஜெட்டுக்கு (Budget) முன்னோட்டமாக இந்த நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய திமுக அரசின் நிதிச் செயல்பாடுகளைப் பகிரங்கமாகத் தோலுரித்துக் காட்டியுள்ள இந்த அறிக்கை, தற்பொழுது கோட்டை வட்டாரங்களிலும் தமிழக அரசியல் களத்திலும் மாபெரும் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!