×
 

தமிழ்நாடு தலைகுனியாது!  234 தொகுதிகளிலும் திமுகவின் அதிரடி பரப்புரை இன்று தொடக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற முழக்கத்துடன் திமுக தனது தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 28 வரை நடைபெறவுள்ள பரப்புரையில், தமிழகத்தின் 234 தொகுதிகளையும் சென்றடைய திமுக திட்டமிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கானக் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது பிரம்மாண்டப் பரப்புரையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முறைப்படித் தொடங்குகிறது. “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற முழக்கத்துடன், மாநிலத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் சூறாவளிப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுகவின் இந்த அதிரடி ஆட்டம் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை ஒரு மாதம் முழுவதும் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பிரத்யேகமாகத் தேர்வு செய்யப்பட்ட 20 நட்சத்திரப் பேச்சாளர்கள் இந்தப் பரப்புரையில் ஈடுபடுகின்றனர். இதில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், எஸ்.எஸ். சிவசங்கர், கோவி. செழியன், எம்பி-க்கள் கனிமொழி கருணாநிதி, தயாநிதி மாறன், திருச்சி சிவா மற்றும் திண்டுக்கல் ஐ. லியோனி உள்ளிட்டோர் அடங்குவர்.

இதையும் படிங்க: “பிப்ரவரி 2-ல் தவெக வேட்பாளர் பட்டியல்?” - தமிழக அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு!

பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருடன் இந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் நேரிடையாகக் கலந்துரையாடுவார்கள். கடந்த 5 ஆண்டுகால திமுக அரசின் சாதனைகள், குறிப்பாக மகளிருக்கானக் கட்டணமில்லாப் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வில் மத்திய அரசு காட்டும் பாரபட்சம் மற்றும் ‘சமக்ர சிக்ஷா’ நிதி முடக்கம் போன்ற விவகாரங்களை முன்னிறுத்தி, மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளைப் பொதுமக்களிடம் இப் பரப்புரை அம்பலப்படுத்தும். பரப்புரை ஒருபுறம் நடக்க, மறுபுறம் 2026 தேர்தல் அறிக்கைக்கானப் பரிந்துரைகளையும் திமுக இணையதளம் வழியாக வரவேற்றுள்ளது. உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி எனத் துறை வாரியாகப் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு, அதற்கேற்பத் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்ய அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

அதிமுக மற்றும் தவெக போன்றக் கட்சிகள் ஏற்கனவே தங்களது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், திமுகவின் இந்த ஒருங்கிணைந்தப் பரப்புரை தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல் 2026: 5 மாநில அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அவசர அழைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share