×
 

கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கே உண்டு என கி.வீரமணியும், கேள்வி கேட்பவர்களே சமூக மாற்றத்தை உருவாக்குவர் எனக் கனிமொழியும் கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழாவில் பேசியுள்ளனர்.

பொம்மலாட்டக் கலையின் மூலம் முற்போக்குச் சிந்தனைகளை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த கலைமாமணி மு.கலைவாணனின் திருவுருவப் படத்திறப்பு விழா, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. திராவிடப் பாரம்பரியத்தையும் அதன் கொள்கைப் பின்னணியையும் விளக்கும் அரணாக இந்த நிகழ்வு அமைந்தது.

நிகழ்ச்சியில் மறைந்த பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணனின் திருவுருவப் படத்தை விஐபிக்கள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு, ஓவியர் டிராஸ்ட்கி மருது உள்ளிட்டோர் பங்கேற்று, கலைவாணன் பொம்மலாட்டக் கலை மூலம் சமூகத்தில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களை விரிவாக எடுத்துரைத்தனர். தொடர்ந்து, கலைவாணன் குடும்பத்தினர் சார்பில் சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத் திட்டத்திற்காக 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, பெரியாரின் கருத்துக்கள் குறித்து தற்போது எழும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார். சாதி ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாலினப் பாகுபாடுகளுக்கு மதமும் கடவுளுமே சமூகத்தில் விடையாக முன்வைக்கப்படுவதாகவும், இந்தத் தடைகளை உடைத்தெறிந்தவர் பெரியார் என்றும் குறிப்பிட்டார். மேலும், எதையும் கேள்வி கேட்கத் தயங்காதவர்கள் மட்டுமே இந்தச் சமூகத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

அவரைத் தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தேர்தல் வெற்றி தோல்விகளைத் தாண்டி திராவிடப் பாரம்பரியம் மிக வலுவான அடித்தளத்தைக் கொண்டது என்றார். கலையில்தான் பண்பாட்டு ஆபத்துகள் முதலில் ஆரம்பிக்கும் என்ற பெரியாரின் கருத்தைச் சுட்டிக்காட்டிய அவர், பலர் பேசாத பொம்மைகளாக இருக்கும் இந்தச் சூழலில், பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு என்றார். கலை என்பது எளிய மக்களுக்கானது என்றும், பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கப் பொம்மலாட்டக் கலையைத் தொடர்ந்து கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், அதற்குத் திராவிடர் கழகம் என்றும் துணையாக இருக்கும் என்றும் பேசினார்.

நிகழ்வில் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்ட திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு, கலைவாணனின் தந்தை முத்துக்கூத்தனின் கொள்கைப் பிடிப்பை நினைவுகூர்ந்தார். எம்ஜிஆர் நாடகக் குழுவிலிருந்து எம்ஜிஆர் வெளியேறியபோதும், கொள்கையே முக்கியம் என்று திமுகவிலேயே தொடர்ந்தவர் முத்துக்கூத்தன் என்ற வரலாற்றுத் தகவலைப் பகிர்ந்தார். கலைவாணனின் பிள்ளைகளும் கொள்கை வழியில் நிற்பது இந்த இயக்கத்திற்குப் பெருமை என்ற நெகிழ்ச்சியோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.

இதையும் படிங்க: பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை: வாகனங்கள் கழுவ, செடிகளுக்கு ஊற்ற முற்றிலும் தடை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share