மக்களுக்கான மகத்தான ஆட்சி திமுக! எவ்வளவு திட்டங்கள் வந்திருக்கு தெரியுமா? லிஸ்ட் போட்ட அமைச்சர்..!
தமிழகத்தில் மக்களுக்கான மகத்தான ஆட்சி நடக்கிறது என்று அமைச்சர் கே என் நேரு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசினார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 4428 பயனாளிகளுக்கு மறுவரை செய்யப்பட்ட நிலப்பட்டா உள்பட 2 கோடியே 74 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு விழாவில் பேசுகையில், நலன் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர் திட்டம் போன்றவைகள் மூலம் நேரடியாக மக்களை சந்திக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு செய்து 0 வருவதாக தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைளுக்காக அதிகாரிகளை தேடிச் சென்ற காலம் போய் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் மக்களைத் தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்கே அதிகாரிகள் வந்து குறைகளை தீர்வு காண்கின்றனர் என்றார். நெல்லை மாவட்டத்தில் மட்டும் ரூ.ஒரு கோடியே 86 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் பட்டாக்கள் வழங்கப்படுவதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்துள்ளார் என்றும் கூறினார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1.16 கோடி மகளிர்களுக்கு உரிமைத் தொகையாக மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தற்போது விடுபட்ட மகளிர்களுக்கும் வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்காக நெல்லை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 173 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் நேரு, தகுதி உள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் 1000 ரூபாயாக இருந்த முதியோர் உதவித் தொகை 1,200 என உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என்றும் இதன் மூலம் 42 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “உங்க கனவு ஒருநாளும் பலிக்காது” - அமித் ஷாவிற்கு சவால் விட்ட அமைச்சர் கே.என்.நேரு...!
இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் உயர் கல்வி பயிலும் 9 லட்சம் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்திலும், 5 லட்சம் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாட்டில் 2 கோடியே 26 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன., இந்த அனைத்து குடும்பங்களும் பயனடையும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் மக்களுக்கான ஆட்சி நடப்பதாகவும் இந்த ஆட்சி சிறப்பாக வலுவாக நடக்க மக்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: எங்க கிட்ட வேணாம்! நீங்க கம்பு சுத்த வேண்டியது BJP ஆளும் மாநிலத்தில தான்... முதல்வர் விளாசல்