தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
காவிரியில் உடனடியாக தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஆற்று நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தியும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை நீரைக் கர்நாடக அரசு உடனடியாகத் திறந்துவிட உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பாகத் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான அளவுகோல்களுடன் வரையறுத்துள்ளது. இருப்பினும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்றாமல், தமிழ்நாட்டிற்கான உரிய நீர்ப் பங்கீட்டைக் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்துத் தட்டிக் கழித்து வருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது! காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக கர்நாடகா மேல்முறையீடு!
குறிப்பாக, 15 நாட்களுக்குத் தினமும் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையிலும், அந்த உத்தரவை அமல்படுத்தக் கர்நாடக அரசு அப்பட்டமாகத் தவறியுள்ளது. இதன் காரணமாகக் காவிரி டெல்டாப் பகுதியில் குறுவை மற்றும் சம்பா சாகுபடியை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் நீர்ப் பற்றாக்குறையால் அவதிப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 26-ஆம் தேதி வரையிலான ஒப்பீட்டு நிலவரப்படி, விகிதாச்சார அடிப்படையில் கர்நாடகா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை நீரின் அளவு 9.46 டி.எம்.சி (TMC) ஆகும். இந்த மாபெரும் நீர்ப் பற்றாக்குறையை உடனடியாக ஈடுசெய்யும் வகையில், அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் வினாடிக்கு 7,000 கன அடி வீதம் பிலிகுண்டுலுவில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யக் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவசரக் கட்டளை பிறப்பிக்க வேண்டும் என திமுக தன் மனுவில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!