மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!
மேகதாது குறித்த மத்திய இணை அமைச்சர் ராஜ்பூஷனின் பதில் தவறானது என்றும் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரத்தில் மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் ராஜ்பூஷன் அளித்துள்ள பதில் முற்றிலும் தவறானது என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய பதிலடி கொடுத்து உச்ச நீதிமன்றத்தை உடனடியாக அணுக வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு 2018-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என மத்திய இணை அமைச்சர் ராஜ்பூஷன் மாநிலங்களவையில் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு காவிரி வடிநில மாநிலமான தமிழ்நாட்டின் விவசாயிகளிடையேயும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு குறித்துக் காரசாரமான கருத்து வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மேகதாது குறித்த மத்திய இணை அமைச்சர் ராஜ்பூஷனின் பதில் முற்றிலும் தவறானது. 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தவறாகச் சித்தரித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உரைத்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்களை எளிதாக நினைக்க வேண்டாம்! காவிரி விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி!
மேலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டத் தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் இந்த வாதத்திற்குத் தமிழக அரசு உடனடியாக உரிய முறையில் பதிலடி கொடுக்க வேண்டும். அத்துடன் நதிநீர் உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் இந்த விவகாரத்தை உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனத் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு சதி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!