அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு செக்! அமலாக்க துறை விசாரணை கோரி திமுக எம்.பி. கிரிராஜன் நீதிமன்றத்தில் வழக்கு!
சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்க துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. கிரிராஜன், தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஏற்கனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் பிடியில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அவர்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
திமுக வழக்கறிஞர் அணியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். கிரிராஜன் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, கே.சி. வீரமணி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் மற்றும் காமராஜ் ஆகிய 7 பேர் மீது தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே இவர்களுக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகைகளின் அடிப்படையில், இதில் பெரும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதால் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!
ஊழல் மூலம் ஈட்டப்பட்ட பணம் எங்கே முதலீடு செய்யப்பட்டது? வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டதா? என்பது குறித்து பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என எம்.பி. கிரிராஜன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் வேளையில், முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை விசாரணையைத் தூண்டிவிடும் வகையில் திமுக எடுத்துள்ள இந்தச் சட்டப்போர் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனுக்கள் இன்னும் சில தினங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை! விளாத்திகுளம் மாணவி குடும்பத்தினருக்கு ஈபிஎஸ் உறுதி!