திமுக செய்வது பச்சை துரோகம்... Group4 மூலம் காலி பணியிடங்களை நிரப்ப சீமான் வலியுறுத்தல்...!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மூலம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் வெறும் 4622 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்தால் 3.5 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அதிகாரத்தை அடைந்த பிறகு அதனை நிறைவேற்ற மறுப்பது ஆட்சியில் அமர்த்திய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகம் என்று தெரிவித்தார்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி அரசுத்துறைகளில் காலியாக உள்ளப் பணியிடங்களை தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் நிரப்பி வருகிறது என்றும் முந்தைய அதிமுக அரசு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சராசரியாக 10000 பணியிடங்கள் என்ற அளவில் பணியிடங்களை நிரப்பி வந்தது எனவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எவ்வித அரசுத்தேர்வும் நடைபெறவில்லை என்று கூறிய சீமான், மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் ஓய்வுபெற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் 4 இலட்சத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவசர அவசரமாக SIR... 6 கோடி பேருக்கு வாக்குரிமை பறிபோகும்... சீமான் எச்சரிக்கை...!
தமிழ்நாடு முழுவதும் அரசுத்துறைகளில் பல இலட்சம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப் 4 தேர்வில் அதிக காலிப்பணியிடங்களை நிரப்ப திமுக அரசு முன்வாராதது ஏன் என்றும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மிகக்குறைந்த பணியிடங்களை நிரப்புவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். அரசுப்பணி போட்டித்தேர்வுக்கு முயற்சிக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் நடப்பாண்டில் குறைந்தப்பட்சம் 30,000 காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி... SIR- க்கு வலுக்கும் எதிர்ப்பு...! சீமான் அறிவிப்பு...!