×
 
☰

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கு இடமில்லையா? கொடி நாள் பேட்ஜ் சர்ச்சையில் தவெக அரசை சாடிய திமுக!

காவல்துறை கொடி நாள் பேட்ஜில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றிருப்பது குறித்துத் தவெக அரசை திமுக கடுமையாகக் கண்டித்துள்ளது.

காவல்துறையினரின் தியாகத்தை நினைவுகூரும் காவல்துறை கொடி நாளில், தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே அச்சிடப்பட்ட பேட்ஜை தமிழ்நாடு காவல்துறையினர் தங்களது சீருடையில் அணியுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டி, ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மீது திராவிட முன்னேற்றக் கழகம் மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழும் ஆங்கிலமும் என்பதுதான் பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த தமிழ்நாட்டின் அசைக்க முடியாத இருமொழிக் கொள்கை. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் அது 'இந்தியிம் ஆங்கிலமும்' என்ற புதிய இருமொழிக் கொள்கையாக மாற்றப்பட்டுவிட்டதா?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

மேலும், தமிழ்நாடு காவல்துறை கொடி நாளில் காவல்துறையினர் அணியும் பேட்ஜில் தமிழ் மொழி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, இந்தி மற்றும் ஆங்கில எழுத்துகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் சூழல் உருவாக்கப்பட்டிருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தண்ணீர் தேங்காததற்கு திமுக ஆட்சியே சான்று: தவெக அரசு மீது தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் காட்டம்!

காவல்துறை என்பது முற்றிலும் மாநில அரசின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்ட துறை என்பதை, உள்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து ஒட்டுமொத்தக் காவல்துறை மீதான நிர்வாகப் பொறுப்பையும் மத்திய அரசிடம் அடமானம் வைத்துச் சரணடைந்துவிட்டாரா எனவும் திமுக மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. 

பல ஆண்டுகளாக மத்திய அரசு இத்தகைய மொழித் திணிப்பு அழுத்தங்களைக் கொடுத்த போதிலும் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள திமுக, சொந்த மண்ணிலேயே தாய்மொழியான தமிழுக்கு இடம் கேட்டு நிற்க வேண்டிய அவலநிலையைத் தற்போதைய அரசு உருவாக்கியுள்ளதாகவும், தவெக அரசுக்குச் சுயமரியாதையோ முதுகெலும்போ துளியும் இல்லை எனவும் மிகக் காட்டமாகச் சாடியுள்ளது.

இதையும் படிங்க: நயினாரை கைது செஞ்சீங்களா.? அப்பட்டமான அத்துமீறல்..! நாதக கார்த்திகாவுக்கு குரல் கொடுத்த கனிமொழி எம்.பி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share