மீண்டும் 2.0 திராவிட மாடல்தான்... இளைஞரணிக்கு அதிமுக்கியத்துவம்... அதகளப்படுத்தும் திமுக...!
தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக, இளைஞரணிக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
திமுக இளைஞரணிக்கு அக்கட்சி தலைமை தற்போது அதிக முக்கியத்துவம் அளித்து வருவது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி 1980ஆம் ஆண்டு மதுரையில் முறையாகத் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கட்சியின் அடித்தளமாகவும், கொள்கைப் பரப்புரையின் ராணுவமாகவும் திகழ்கிறது. கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நீண்ட காலம் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பு வகித்தார். அவரது வழியில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இது கட்சியின் இளைய தலைமுறைக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றதில் இருந்து அணி புத்துயிர் பெற்றது. லட்சக்கணக்கான இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தல், அடித்தளம் முதல் மாவட்டம் வரையிலான அமைப்புகளை வலுப்படுத்துதல், பயிற்சி முகாம்கள் நடத்துதல், புதிய பேச்சாளர்களை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கலைஞர் நூலகங்கள் அமைத்தல், அறிவுத் திருவிழாக்கள் நடத்துதல், வாசகர் வட்டங்கள் ஏற்படுத்துதல் போன்ற திட்டங்கள் இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கொள்கைகளை ஆழமாக ஊட்டுவதற்காக மேற்கொள்ளப்படுகின்றன.
இவை அனைத்தும் இளைஞரணியை கட்சியின் முதன்மையான அங்கமாக உயர்த்தியுள்ளன. குறிப்பாக 2024ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த இளைஞரணி மாநில மாநாடு பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதேபோல் 2025இல் திருவண்ணாமலையில் நடந்த வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு லட்சக்கணக்கானோர் பங்கேற்புடன் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று இளைஞரணியை கட்சியின் கொள்கை வலிமையின் முதுகெலும்பு என்று பாராட்டினார்.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை... கண்டுகொள்ளாத திமுக... வடமாநில இளைஞர் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்...!
உதயநிதி ஸ்டாலினும் இளைஞரணியை கட்சியின் ராணுவம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இளைஞரணிக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சராகவும் உதயநிதி ஸ்டாலின் இருப்பதால் இளைஞரணி நிர்வாகிகள் தொகுதி வாரியாகத் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இளைஞரணி கோட்டாவில் அதிக சீட்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. திமுக அரசின் சாதனைகளை இளைஞர்கள் வீடு வீடாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினும் திராவிட மாடல் 2.0 அரசை உருவாக்க இளைஞரணியே முன்னெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.இளைஞரணிக்கு திமுக தலைமை அளிக்கும் இந்த முக்கியத்துவம் கட்சியின் எதிர்காலத்தை இளைய தலைமுறையிடம் ஒப்படைக்கும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி தமிழக அரசியலில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது. 2026 தேர்தலில் இது திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமையும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தீவிரம்... கருத்து கேட்கும் செயலியை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்...!