வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்! குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!
வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அரசு மற்றும் கல்வி நிறுவன விழாக்களில் வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் எக்காரணம் கொண்டும் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வந்தே மாதரம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா குறித்துத் தொல். திருமாவளவன் எம்பி இன்று வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், வந்தே மாதரம் பாடலை அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் விழாக்களில் கட்டாயமாகப் பாட வேண்டும், இல்லாவிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை என அறிவித்து மத்திய பாஜக அரசு சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அந்தப் பிரிவினைவாத, மதசார்புள்ள கருத்துகளைக் கொண்ட பாடலுக்கான சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!
மேலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய கௌரவத்திற்கு அவமரியாதை தடுப்புச் சட்டம் (திருத்தம்) மசோதா, 2026 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் எதிரான ஆபத்தான நடவடிக்கையாகும். அரசியல் நிர்ணய சபை 1950-இல் திட்டமிட்டே எடுக்க மறுத்த முடிவை, 76 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு சட்டத்தின் மூலம் திணிக்க முயல்கிறது.
1937-ஆம் ஆண்டிலேயே மகாத்மா காந்தி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள், வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பொதுநிகழ்வுகளுக்கு ஏற்றவை என்றும், பிற சரணங்களில் இடம்பெறும் தெய்வ வழிபாட்டுக் கூறுகளை அனைவர்மீதும் திணிப்பது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு உகந்ததல்ல என்றும் தெளிவாக முடிவு செய்திருந்தனர். அதையே அரசியல் நிர்ணய சபையும் ஏற்றுக்கொண்டதால் தான் தாகூரின் 'ஜன கண மன' பாடல் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது என வரலாற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த வரலாற்றைப் புறக்கணித்து, வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களுக்கும் குற்றவியல் சட்டப் பாதுகாப்பை வழங்குவது நாட்டை ஒருங்கிணைக்கும் செயல் அல்ல; மாறாக, மத அடிப்படையிலான பிளவுகளை ஆழப்படுத்தும் முயற்சியாகும். ஏற்கனவே பிஜு இமானுவேல் வழக்கில் அளித்தத் தீர்ப்பில், தேசிய கீதத்தைப் பாட மறுத்தாலும் மரியாதையுடன் எழுந்து நிற்பது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடும் கேரளமும் வரலாற்று ரீதியாக வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாகப் பாடச் செய்வதை எதிர்த்து வந்துள்ளன.
மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசில் மரியாதை என்பது சட்டத்தின் மூலம் திணிக்கப்பட முடியாது; அது மக்களின் மனங்களில் உருவாக வேண்டும். எனவே, அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். நாட்டை மதரீதியில் பிளவுபடுத்தும் இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது எனத் தனது அறிக்கையில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "நதி இருந்த இடத்தில் குப்பைகள்... சனத்குமார் நதியை ஆய்வு செய்த தருமபுரி எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி!