எம்.எல்.ஏ கார் நிதி வேண்டாம்; நெல் கொள்முதல் நிலையம் கட்டி தாருங்கள்! சௌமியா அன்புமணி கோரிக்கை!
காருக்கான நிதியில் எங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் புதிய கார்களைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டாம் என்றும், அதற்காக ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு தங்கள் தொகுதியில் விவசாயிகளுக்குத் தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் புதிய சொகுசு கார்கள் வழங்கும் திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது ஒவ்வொரு உறுப்பினரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது; ஆனால் பாமகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருவருமே அரசு வழங்கும் இந்தக் காரைப் பெற்றுக்கொள்வதில்லை எனத் தீர்க்கமாக முடிவு செய்துள்ளோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீர்ப்பாசனத் திட்டம் எங்கே? வேளாண் பட்ஜெட்டை கடுமையாக சாடிய சௌமியா அன்புமணி!
மேலும், எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்குவதற்காக ஒதுக்கப்படும் அரசு நிதியை மக்களின் அத்தியாவசியப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், எங்களுக்கு ஒதுக்கப்படும் காரின் நிதியைப் பயன்படுத்தி, எங்கள் தொகுதி விவசாயிகளின் நலன் கருதி முறையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நெல் கொள்முதல் நிலையங்களைக் கட்டித் தந்தால் அது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது பெரும் பிரச்சனை..! தமிழ்நாட்டிற்கு பேராபத்து...!! பேரவையில் எச்சரித்த சௌமியா அன்புமணி..!!