×
 

டோல்கேட்டுகளில் இலவசம்; சாலை வரியில் விலக்கு - தனியார் பேருந்து துறையை காக்க முதல்வருக்கு வேண்டுகோள்!

மின்சாரப் பேருந்துகளுக்கு (EV) மாற 3 ஆண்டுகள் வரி விலக்கு அளிக்கக் கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகளை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்பட்டு வரும் சாலை வரி விலக்கு வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இதனை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனத் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தில் மிக முக்கியப் பங்காற்றி வரும் தனியார் ஆம்னி பேருந்துத் துறையை மின்மயமாக்குவதில் (EV Transformation) உள்ள நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முனைவர் அழகப்பா அன்பழகன் இன்று முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு மின்சாரப் பேருந்துகளுக்கு வழங்கி வரும் சாலை வரி விலக்கு வரும் 31.12.2025 அன்றுடன் முடிவடைய இருப்பதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

தற்போதைய சூழல் குறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில், “தமிழகத்தில் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து சேஸ்களை வாங்கி இந்தியாவில் பாடி கட்டி மின்சாரப் பேருந்துகளை இயக்குகின்றன. தொலைதூரப் பயணங்களுக்கு ஏற்ற மின்சாரப் பேருந்துகள் நம் நாட்டுத் தயாரிப்பு நிறுவனங்களிடம் இன்னும் தயார் நிலையில் இல்லை. கடந்த ஜூலை மாதம் ஆர்டர் செய்த 150-க்கும் மேற்பட்ட பேருந்துகளே இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்போதுதான் உற்பத்தியாளர்கள் தொலைதூர இயக்கத்திற்கு உகந்த பேருந்துகளைத் தரும் நிலை உருவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: 1995 & 2002 பேட்ச் அதிகாரிகளுக்குப் புத்தாண்டுப் பரிசு! 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!

மேலும், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் “தமிழகத்தில் அதிவேக சார்ஜிங் மையங்கள் இன்னும் பரவலாக உருவாக்கப்படவில்லை. உளுந்தூர்பேட்டை பகுதியில் எங்கள் சங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள மையத்தைத் தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளில் போதிய வசதிகள் இல்லை. இந்தச் சிக்கல்களால் தனியார் ஆம்னி மின்சாரப் பேருந்துகள் பெரிய அளவில் இயக்கப்படுவதில்லை. எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தனியார் ஆம்னி மின்சாரப் பேருந்துகளுக்குக் குறைந்தது 3 ஆண்டுகள் சாலை வரி விலக்கு அளிக்க வேண்டும். மேலும், மகாராஷ்டிராவைப் போல மாநில அரசு டோல்கேட்டுகளில் மின்சாரப் பேருந்துகளுக்கு முழு டோல் கட்டண விலக்கு வழங்கி, சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இந்தச் சலுகைகள் வழங்கப்பட்டால் மட்டுமே தமிழக அரசின் ‘பசுமைப் போக்குவரத்து’ (Green Mobility) மற்றும் ‘நெட் ஜீரோ’ (Net Zero) இலக்குகளை விரைவில் எட்ட முடியும் என அழகப்பா அன்பழகன் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த செவிலியர்கள் போராட்டம்: 1000 பேருக்கு முதற்கட்டமாக பணி நிரந்தரம்! - தமிழக அரசு அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share