“அடிப்படை உறுப்பினரே இல்லை, பிறகு எப்படி தலைவர்?” அன்புமணிக்கு எதிராக கொதிக்கும் டாக்டர் ராமதாஸ்!
பாமகவில் தந்தை - மகன் இடையேயான அதிகார மோதலில், அன்புமணி ராமதாஸ் தன்னை தலைவர் என அழைப்பது நீதிமன்ற அவமதிப்பு என டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
பாமகவில் தந்தை - மகன் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் தன்னை கட்சியின் தலைவர் என்று சொல்லிக்கொள்வது நீதிமன்ற அவமதிப்பு என டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். பாமகவின் சின்னம் மற்றும் கொடியை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் இன்று மிக முக்கியமான நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் கூத்தா அருள்மொழி, செயல் தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 20 முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இருப்பினும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். "டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படியும், தேர்தல் ஆணையத்தின் கருத்துப்படியும் அன்புமணி பாமகவின் தலைவர் என்று சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்கக்கூடாது என்று செயற்குழுவும் பொதுக்குழுவும் முடிவு எடுத்த பிறகும், அவர் தன்னைத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு திரிவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்" என ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், ஊடகங்கள் அவரைப் பாமக தலைவர் என்று சித்தரிக்க வேண்டாம் எனவும், கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை அவர் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: சேலத்தில் நடந்த ரகசிய மீட்டிங்! இபிஎஸ்-ஐ சந்தித்த பாமக டீம் - திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஸ்கெட்ச்..!
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்துப் பேசிய அவர், கூட்டணி முடிவை எடுக்கும் முழு அதிகாரத்தைச் சேலம் பொதுக்குழு எனக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பாக நிர்வாகக் குழுவில் விரிவாக விவாதித்துள்ளோம். விரைவில் ஒரு 'நாணயமான' மற்றும் 'வெற்றிகரமான' கூட்டணியை மக்களுக்கு அறிவிப்போம். அது மக்கள் மெச்சும் கூட்டணியாக இருக்கும் என்றார். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, நாங்கள் சொல்வதை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள், மற்றவர்கள் கூறுவதைப் பொருட்படுத்த வேண்டாம் என மர்மமாகப் பதிலளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ஓட்டுகளை வாங்குவதற்காக எப்படியாவது எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் மக்கள் தான் எஜமானர்கள், அவர்கள் எதனையும் சரியாகத் தீர்மானிப்பார்கள் எனத் தெரிவித்தார். மேலும், பாமக சார்பில் போட்டியிட இதுவரை 4,109 பேர் விருப்ப மனு அளித்துள்ளதாகவும், இது அக்கட்சியின் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான இந்த அதிகாரப் போர், பாமகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைப் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: 5 வருஷமா என்ன செஞ்சீங்க? ஒரு மெகாவாட் கூட உற்பத்தி பண்ணலையா? திமுகவை சாடிய அன்புமணி!