பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரனுக்கு மருத்துவர் ராமதாசு கடும் கண்டனம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக தலைவர் விஜய் குறித்துப் பேசிய கருத்தைக் கண்டித்து இன்று (பிப்ரவரி 15, 2026) தைலாபுரம் தோட்டத்தில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசிய கருத்திற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும், திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மூத்த அரசியல்வாதியாகவும், ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகவும் உள்ள நயினார் நாகேந்திரன், தனது பேச்சுக்காகத் தமிழகப் பெண்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரிகம் என்று மருத்துவர் ராமதாசு தெரிவித்துள்ளார்.
நாட்டைத் தாய்நாடு என்று அழைப்பதும், நதிகளுக்கும் நெல்லுக்கும் பெண்கள் பெயரை வைப்பதும் மட்டும் பெருமையல்ல; அவர்களுக்கு உரிய மரியாதையையும் சமூக அந்தஸ்தையும் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நயினாருக்கு அரசியல் அறிவே இல்லை: த.வெ.க. இணை செயலாளர் நிர்மல் குமார் ஆவேசம்!
கடந்த 2023-ம் ஆண்டு குஷ்பூ குறித்து அவதூறாகப் பேசியபோது கொதித்தெழுந்த குஷ்பூ, தற்போது நயினார் நாகேந்திரனின் கருத்திற்கு கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிப்பதாகக் கூறியுள்ளார். அதே நேரம், இந்த விவகாரத்தில் கனிமொழி எம்பி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெண் குழந்தைகளைப் பிறந்தது முதல் 19 வயது வரை 'பெண் தெய்வங்கள்' என்றும், 19 வயதிற்கு மேல் தேவதைகள் என்றும் நான் எப்போதும் சொல்லி வருகிறேன் என மருத்துவர் ராமதாசு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவர்களை மதிக்கக் கற்றுக்கொண்ட பின்னரே பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு போன்ற பாஜகவின் கனவுகளைப் பற்றிப் பேச வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!