இங்கிருப்பது ஸ்டாலின் படை! - கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பேச்சு!
தஞ்சையில் நடைபெறும் பிரம்மாண்ட மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., எதிர்க்கட்சிகள் மற்றும் புதிய அரசியல் வரவுகள் குறித்து அனல் பறக்கும் விமர்சனங்களை முன்வைத்தார்.
தஞ்சை செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற திமுக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பிரம்மாண்ட மண்டல மாநாட்டில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. எதிர்க்கட்சிகளையும் புதிய அரசியல் வரவுகளையும் மிகக் கடுமையாகச் சாடி உரையாற்றினார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் பாஜகவின் ‘டபுள் இன்ஜின்’ முழக்கத்தை முன்வைத்து அவர் ஆற்றிய உரை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டில் பேசிய கனிமொழி எம்.பி., உள்ளூர்ல இருந்தும் சிலர் பல கனவுகளோடு தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். நமக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இங்கே கூடியிருக்கும் இந்தக் கூட்டம் அவர்களுக்குப் பாடம் சொல்லித்தந்திருக்கும். இது தளபதியின் படை, நம்முடைய கழகத் தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுடைய படை எனத் தெரிவித்தார். இது மறைமுகமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. வாய் சவடால் விட்டு ஆட்சி நடத்த முடியாது என்பது தமிழ்நாட்டுப் பெண்களுக்கு நன்றாகத் தெரியும்; அவர்கள் யாரையும் நம்பி ஏமாற மாட்டார்கள் என்றும் அவர் சூளுரைத்தார்.
அதிமுகவின் புதிய தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்த அவர், யார் வேண்டுமானாலும் பத்தாயிரம், எட்டாயிரம் தருகிறேன் என சொல்லலாம். பெயரை மாற்றி குல விளக்கு திட்டம் என்று கூடச் சொல்லலாம். ஆனால், முன்னதாக ஸ்கூட்டி தருவதாகச் சொன்னார்கள், அது வந்ததா? இல்லை. அதேபோலத்தான் இந்தக் குல விளக்கும் வீட்டுக்கு வராது" எனச் சாடினார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே ‘விடியல் பயணம்’ திட்டத்தில் கையெழுத்திட்டதையும், ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமைத் தொகை பெண்களின் கதவைத் தட்டுவதையும் சுட்டிக்காட்டி, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முதலமைச்சரால் மட்டுமே முடியும் எனப் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அரசியல் வேறு.. நட்பு வேறு!" தமிழிசையுடன் கரம் கோர்த்த கனிமொழி! இணையத்தை கலக்கும் புகைப்படம்!
பாஜகவின் டபுள் இன்ஜின் முழக்கத்தைப் புள்ளிவிவரங்களுடன் சாடிய கனிமொழி, மத்திய அரசு சொல்லும் அந்த இன்ஜின் என்னைக்குமே வேலை செய்யாத ஒரு ரிப்பேர் மாடல் இன்ஜின். திராவிட மாடல் என்ஜினைப் பாருங்கள், தமிழ்நாட்டில் 2,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஒரு லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால் குஜராத்தில் வெறும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன" என ஒப்பிட்டுக் காட்டினார். கோவிட் காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் டிராக்டர்களில் படுத்துக் கிடந்த அவலத்தையும் அவர் தனது உரையில் நினைவு கூர்ந்தார்.
இதையும் படிங்க: சென்னையில் கம்பீரமான குடியரசு தின விழா: ஆளுநர் ரவிக்கு முப்படைகள் அணிவகுப்பு மரியாதை!