தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் அறிவிப்பு..!
தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 23ம் தேதி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் தொடர்பாக இந்தக் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்ட பின்னர் இந்த ஆலோசனை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வாக்காளர் பட்டியலை துல்லியமாகவும் புதுப்பித்த நிலையிலும் வைத்திருப்பது ஜனநாயகச் செயல்பாட்டின் அடிப்படை. சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகளின் மூலம் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, ஏற்கனவே உள்ள பட்டியலில் உள்ள பிழைகளைச் சரிசெய்வது, இறந்தவர்கள் அல்லது இடம் மாறியவர்களின் பெயர்களை அகற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். தகுதி நாளாக 2027 ஜனவரி 1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு பெயர் சேர்க்கை, திருத்தம் மற்றும் ஆட்சேபணைகள் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, படிவங்களை சரியாக நிரப்பி சமர்ப்பிப்பதில் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதையும் படிங்க: ஞானேஷ் குமார் பதவி விலகணும்..! CJP-க்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்... குண்டுக்கட்டாக கைது..!!
தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இந்தக் கூட்டத்தில் திருத்தப்பணிகளின் அட்டவணை, பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள், முகவர்களின் பொறுப்புகள் உள்ளிட்டவற்றை விரிவாக விளக்க உள்ளார். கட்சிப் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளவும், எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு தெளிவு பெறவும் வாய்ப்பு அளிக்கப்படும்.
இதையும் படிங்க: தண்ணீர் தேங்காததற்கு திமுக ஆட்சியே சான்று: தவெக அரசு மீது தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் காட்டம்!