தேர்தல் ஆணையமும் காவிமயமாகிவிட்டது! தலைமைச் செயலாளர் மாற்றத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இவை எல்லாம் காட்டுகின்றன. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோரைத் தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியிருப்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாகக் கருதப்படும் தேர்தல் ஆணையமும் தற்போது காவிமயமாகிவிட்டது. பாஜகவின் விருப்பத்திற்கேற்பச் செயல்படும் ஒரு கருவியாகத் தேர்தல் ஆணையம் மாறியிருப்பது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அசாம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிட்டு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது தேர்தல் நடைபெறவுள்ள அசாம், பீகார் போன்ற மாநிலங்களில் தலைமைச் செயலாளர் அல்லது டி.ஜி.பி. எவரும் மாற்றப்படவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் மட்டும் மிக உயரிய பதவிகளில் உள்ள அதிகாரிகளை மாற்றத் தேர்தல் ஆணையம் துடிப்பது ஏன்? என அவர் வினவியுள்ளார்.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் நியமனம்! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
இந்த இடமாற்றங்களின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், எதிர்க்கட்சி மாநிலங்களில் அதிகாரிகளை மாற்றுமாறு பாஜக தூண்டிவிடுகிறது. இது பாஜகவின் காட்டு தர்பார் பிரதிபலிப்பதையே காட்டுகிறது. ஜனநாயக ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள், இத்தகைய குறுக்கு வழிகளைக் கையாள்கிறார்கள் எனச் சாடினார்.
எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும், எத்தகைய முட்டுக்கட்டைகளை உருவாக்கினாலும், திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என முதல்வர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மக்களின் ஆதரவு எங்களுடன் இருக்கிறது. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் இந்தச் சதிகளுக்குப் பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆளும் திமுக மற்றும் பாஜக இடையே இந்த விவகாரத்தில் கடுமையான வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள்! இறுதி மற்றும் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் வெளியீடு!