×
 

திருவான்மியூர் டூ உத்தண்டி.. 4 வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு..!!

சென்னை ஈசிஆரில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கிலோமீட்டர் நீளத்திற்கு 4 வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து, பயணிகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, சர்தார் படேல் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓஎம்ஆர், மற்றும் ஜிஎஸ்டி சாலையில் நாள்தோறும் கடும் நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் பணிகள், நெடுஞ்சாலை மேம்பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன.

குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) பயணிகளுக்கு இயற்கை எழில் கொஞ்சும் பாதையாக இருந்தாலும், அண்மைக் காலமாக இங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 15 கி.மீ பகுதி, வார இறுதி நாட்களிலும், பண்டிகை மற்றும் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. இப்பகுதியில் தினசரி 69,000 வாகனங்கள் பயணிக்கின்றன, மேலும் 17 சிக்னல்கள் மற்றும் 347 சிறு பாதைகள் இணையும் இடங்களால் நெரிசல் மோசமாகிறது.

இதையும் படிங்க: தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS சேர போறீங்களா..?? கட்டணம் எவ்வளவு-னு தெரிஞ்சிக்கோங்க..!

ஈசிஆர்-ஐ 6 வழிப்பாதையாக விரிவாக்கும் பணி மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு, 25% முடிந்துள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் திட்டத்தை பாதிக்கின்றன. பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இந்நெரிசலைத் தவிர்க்க ஓஎம்ஆர்-ஈசிஆர் இணைப்பு பாலம், மாற்று வழித்தடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். 

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த மெகா திட்டத்திற்கு ரூ.2,100 கோடி ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் (TANSHA) மூலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான டெண்டர் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

இந்த உயர்மட்ட சாலை, சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ECR சாலையில் பயண நேரம் அதிகமாக இருப்பதால், இந்த மேம்பாலம் மூலம் திருவான்மியூர்-உத்தண்டி இடையேயான பயணம் 15 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்திட்டம் ஹைப்ரிட் அன்யூட்டி முறையில் செயல்படுத்தப்படுகிறது, இதில் LB சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகள் அமைக்கப்படும். இந்த மேம்பாலம் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். மேலும், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட உள்ளன. 

2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் இத்திட்டம் முக்கிய அறிவிப்பாக இடம்பெற்றுள்ளது, இது முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டம் முடிவடையும் பொழுது, சென்னையின் கடற்கரைப் பகுதிகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு வசதியான மற்றும் விரைவான போக்குவரத்து உறுதி செய்யப்படும். இது மட்டுமின்றி, சுற்றுலா மற்றும் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் இந்த உயர்மட்ட சாலை பெரிதும் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இனி ரூ.25,000-லாம் வேண்டாம்.. வெறும் ரூ.2,500 போதும்.. தமிழக அரசு அறிமுகப்படுத்திய சூப்பர் திட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share