இனி ரூ.25,000-லாம் வேண்டாம்.. வெறும் ரூ.2,500 போதும்.. தமிழக அரசு அறிமுகப்படுத்திய சூப்பர் திட்டம்..!!
தமிழ்நாடு அரசு, டைட்டானியம் புற்றுநோய் சோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பாக முழு உடல் பரிசோதனை திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என நான்கு வகை முழு உடல் பரிசோதனை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன .
கோல்டு திட்டத்திற்கு 1000 ரூபாயும், டைமன்ட் திட்டத்திற்கு 2000 ரூபாயும், பிளாட்டினம் திட்டத்திற்கு 3,000 ரூபாயும், பிளாட்டினம் பிளஸ் திட்டத்திற்கு 4,000 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதில் ரத்த சர்க்கரை, சிறுநீர் ஆய்வு, கல்லீரல் செயல்பாடு, கிட்னி செயல்பாடு, தைராய்டு , ஈசிஜி, டிரெட்மில் சோதனை என்பன உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகைக்காக இத்தனை லட்ச விண்ணப்பங்களா..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
இந்நிலையில் பொது மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் “டைட்டானியம்” என்ற புதிய புற்றுநோய் சோதனை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், 10 வகையான புற்றுநோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் அதிநவீன முழு உடல் பரிசோதனை மையத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மக்கள் குறைந்த செலவில் உயர்தர மருத்துவ சேவையைப் பெற முடியும்.
இந்த டைட்டானியம் சோதனை, தனியார் மருத்துவமனைகளில் சுமார் 25,000 ரூபாய் செலவாகும். அதே சேவையை, வெறும் 2,500 ரூபாய் கட்டணத்தில் வழங்குகிறது. இதனால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களும் பயனடைய முடியும். புற்றுநோய் கண்டறிதலில் ஆரம்பகட்ட கண்டறிதல் மிக முக்கியமானது என்பதால், இத்திட்டம் உயிர்காக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்டவற்றை இந்த சோதனை துல்லியமாக கண்டறியும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு மருத்துவத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த டைட்டானியம் திட்டமும், மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ வசதிகளை உறுதி செய்யும் மற்றொரு முயற்சியாகும். இதற்காக அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்திட்டம், புற்றுநோய் கண்டறிதலில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் மூலம் தமிழ்நாட்டை மருத்துவ சேவைகளில் முன்மாதிரி மாநிலமாக உருவாக்குவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இதுபோன்ற முயற்சிகள் மூலம் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: அழிவின் விளிம்பில் இருவாச்சி பறவைகள்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு..!!