விசுவாசிகளுக்கே சீட்..! அங்க மரியாதையே இருக்காது..! கட்சித் தாவியவர்களை பொளந்து கட்டிய EPS..!
அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றவர்களுக்கு மரியாதை இருக்காது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு தொடர் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவில் நீண்டகாலமாக நிலவும் உள் மோதல்கள், தலைமை மீதான அதிருப்தி மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்த கவலைகள் காரணமாக, முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் தமிழக வெற்றி கழகம் எனும் புதிய அரசியல் சக்தியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த இணைப்புகள் வெறும் தனிப்பட்ட முடிவுகளாக மட்டும் இல்லாமல், தமிழக அரசியலின் பெரும் மாற்றத்தை உணர்த்தும் அறிகுறியாகவும் பார்க்கப்படுகின்றன.
தவெக தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று ஆட்சியமைத்த பிறகு, இந்த இணைப்பு அலையானது மேலும் வலுப்பெற்றது. அதிமுகவில் ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட தலைமைப் பிரச்னைகள், உள் குழப்பங்கள் மற்றும் கட்சியின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மந்தநிலை ஆகியவை பல மூத்த தலைவர்களை அதிருப்தியடையச் செய்தன. ஜெயலலிதா இருந்தபோது இருந்த கட்சி ஒற்றுமை மற்றும் தொண்டர்களின் உற்சாகம் இப்போது இல்லாத நிலையில், பலர் தங்களால் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை எனக் கூறி வெளியேறத் தொடங்கினர்.
சமீபத்திய நிகழ்வுகளில், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், எம்.ஆர். சிவபதி, எம்.எஸ்.எம். ஆனந்தன், திருச்சி வளர்மதி உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து பல முன்னாள் எம்எல்ஏக்களும், வனரோஜா, பாலகங்கா, இளவரசன் போன்ற முன்னாள் எம்பிக்களும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கட்சியை மாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: சசிகலா, TTV தினகரன் ரீ-என்ட்ரி..? WAIT & SEE..! அரசியல் களத்தை குலுக்கிய கே.சி. கருப்பண்ணன்..!!
திருப்பத்தூர் மாவட்ட கழக நிர்வாகிகளிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். அப்போது, அதிமுகவில் இருந்து சென்றவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் மரியாதை இருக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை பரிந்துரையுங்கள் என்று நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் பெண்களுக்கு அதிமுக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பதவி சுகத்திற்காக தான் அதிமுகவில் இருந்து சிலர் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றுள்ளனர் என்று தெரிவித்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TTV தினகரனை கூப்பிடுங்க..! எடப்பாடிக்கு மீண்டும் அழுத்தம்... மாறுமா அரசியல் களம்..?