இப்படியெல்லாம் சாவு வருமா?... விடிந்ததுமே கொதித்தெழுந்த தூய்மை பணியாளர்கள்...!
தேனி மாவட்டம் கம்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் புகைப்படத்தை மறைப்பதற்காக சென்ற ஒப்பந்ததூய்மை பணியாளர் ஹைட்ராலிக் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்துவதற்காக தேனி மாவட்டம் கம்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் புகைப்படத்தை மறைப்பதற்காக சென்ற ஒப்பந்ததூய்மை பணியாளர் ஹைட்ராலிக் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்தார். தூய்மை பணியாளர்கள் இழப்பீடு வழங்க கோரி நகராட்சியை முற்றுகையிட்டு தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் டிடிவி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 36 இவர் தனியார் நிறுவனம் மூலம் கம்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் நகராட்சி பகுதியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், போஸ்டர்கள் தூய்மை பணியாளர் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்று மாலை கம்பம் வாரச் சந்தை நுழைவுவாயிலில் |மேற்பகுதியில் உள்ள ஒரு தலைவரின் புகைப்படத்தை மறைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் மணிகண்டனை அழைத்துள்ளனர். அப்போது அங்கு சென்ற மணிகண்டன் நகராட்சியில் தெருவிளக்கு பராமரிப்பு பணிக்காக உள்ள ஹைட்ராலிக் பிளாட்பார்ம் வாகனத்தில் இருந்து பணி செய்து கொண்டிருந்தபோது மணிகண்டன் எதிர்பாராத விதமாக மேலிருந்து கீழே தவறி விழுந்தார்.
இதையும் படிங்க: காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும்..! ஆதவ் அர்ஜுனா சர்ச்சை... மௌனம் கலைத்த ரஜினி..!
இதில் பலத்த காயமடைந்து கீழே கிடந்த அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை வழக்கம்போல் பணிக்கு வந்த தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் இறந்த மணிகண்டனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி இழப்பீடு வழங்கும் வரை பணிக்குச் செல்ல மாட்டோம் என்று கூறி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறி அரசு சார்பில் வழங்கும் காலை உணவுத் திட்டத்தை அருந்தாமல் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதையும் படிங்க: திமுக ஆட்சி செய்ய தகுதி இல்ல... கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி காட்டம்..!!