நெருங்கும் தேர்தல்... சூடுபிடிக்கும் பணிகள்... தேர்தல் ஆணையக் குழு ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை..!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையக் குழு ஆலோசனை நடத்துகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே பல முக்கிய ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது. இப்போது பிப்ரவரி மாதம் நடுவில் இருக்கும் நிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தின் முதல் மற்றும் மிக முக்கியமான பணி, வாக்காளர் பட்டியலை சரியாகப் புதுப்பிப்பதுதான். தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வீடு வீடாகச் சென்று பூத் லெவல் அதிகாரிகள் வாக்காளர்களை சரிபார்த்து, புதியவர்களைச் சேர்த்து, இறந்தவர்கள் அல்லது இடம் மாறியவர்களை நீக்கி, முகவரிகளைத் தரப்படுத்தி வருகின்றனர். இந்தப் பணி பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.
இதனால் தேர்தலுக்கு முன்பு அனைவரும் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்துக்கொள்ள முடியும். அடுத்ததாக, நியாயமான தேர்தலை உறுதி செய்ய அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் ஆகியோரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..!! அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!
இது அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் நோக்கில் செய்யப்படும் வழக்கமான நடைமுறை. தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டு, பக்கபாடின்றி பணியாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.மேலும், மத்திய பார்வையாளர்களை தயார் செய்யும் பணியும் நடந்து முடிந்துள்ளது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் தேர்தல் ஆணையம், பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள், செலவு பார்வையாளர்கள் ஆகியோருக்கு விரிவான விளக்கக்கூட்டங்களை நடத்தியது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நாளை மறுநாள் தேர்தல் ஆணைய குழு ஆலோசனை நடத்துகிறது. மாவட்ட எஸ்பி களையும் அழைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடிய தொகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: SIR… எங்களுக்கு நீதி கிடைக்கல… சுப்ரீம் கோர்ட்டில் மம்தா காரசார வாதம்..!