34 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7 மடங்கு உயர்வு - தங்கம் தென்னரசு பெருமிதம்!
தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கை நோக்கித் தள்ளும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக, நடப்பு நிதியாண்டில் தமிழகம் 16 சதவீதப் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், தமிழகத்தின் ஜி.டி.பி (GDP) மதிப்பு 31.19 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளாகவே அசுர வேகத்தில் உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய தமிழக நிதி மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இது 'திராவிட மாடல்' அரசின் நிதி நிர்வாக மேம்பாட்டிற்குக் கிடைத்த சாதனைச் சான்றிதழ் என்று தெரிவித்தார்.
இந்தப் பொருளாதார அலசலில் மிக முக்கிய அம்சமாக, உற்பத்தித் துறையில் தமிழகம் கண்டுள்ள அசுர வளர்ச்சியை அமைச்சர் ஆதாரபூர்வமாக விளக்கினார். உற்பத்தித் துறையில் 1.46 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பங்களிப்பு, தற்போது இரண்டு மடங்காகப் பெருகியுள்ளது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தையே தமிழகம் பின்னுக்குத் தள்ளியுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் இன்று 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருவதோடு, அவற்றில் சுமார் 27.7 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். சேவைத் துறை தமிழகப் பொருளாதாரத்தில் 53 சதவீதப் பங்களிப்பை அளித்து பேக்-போன் ஆகத் திகழும் வேளையில், கட்டுமானத் துறையும் 11 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் முழுக்க வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி கட்டாயம்! – சென்னை உயர்நீதிமன்றம்
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் உலக முதலீட்டாளர் மாநாடுகள் மூலம் இதுவரை 11,40,710 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் 34,08,522 இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதித் துறையிலும், குறிப்பாக மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் தமிழகம் ஒரு உலகளாவிய மையமாக உருவெடுத்துள்ளது. 2021-22ல் 1.86 பில்லியன் டாலராக இருந்த மின்னணுப் பொருள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலராக உயர்ந்து, வெறும் மூன்று ஆண்டுகளில் 7 மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. இது 200 சதவீதத்திற்கும் மேலான உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல, களத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமே தமிழகத்தை இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக மாற்றும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ₹5 கோடி கொள்ளை… அபராதம் ₹5 லட்சமா? - கனிம மாஃபியாக்களை வெளுத்த உயர்நீதிமன்றம்