மனித கழிவுகளால் மீன்கள் சாகவில்லை!அமைச்சர் கருத்தை எதிர்த்து 8 கிராம மீனவர்கள் கொந்தளிப்பு!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரத்தில் அமைச்சர் கருத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்ததற்குக் காரணம் தொழிற்சாலைக் கழிவுகள் அல்ல, மனிதக் கழிவுகளே என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ் சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து, 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அறிவித்த தொடர் போராட்டம் அதிகாரிகள் அளித்த சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்துத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி எண்ணூர் கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் சுமார் 2,150 கிலோ அளவிலான மீன்கள் திடீரெனச் செத்து மிதந்தன. இதுகுறித்துச் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகள் எதுவும் கலக்கவில்லை; மாறாக மனிதக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலந்ததால் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறந்திருக்கலாம்.
இது தொடர்பாக 4 பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு 10 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். ஆய்வறிக்கை வருவதற்கு முன்பாகவே விஷவாயு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை மறைத்து மனிதக் கழிவுகள் எனக் கூறிய அமைச்சரின் விளக்கத்தை ஏற்க முடியாது எனக் கூறி நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரக்குப்பம், காட்டுக்குப்பம், சிவன்படை வீதி குப்பம், சின்னக்குப்பம் மற்றும் பெரியகுப்பம் ஆகிய 8 கிராம மீனவ சங்கங்கள் திங்கட்கிழமை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: "பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு"..! எண்ணூர் கழிமுகம் விவகாரம்..! சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.!
இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு தாழங்குப்பம் சமுதாயக் கூடத்தில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவொற்றியூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், காவல் துணை ஆணையர் மகேஸ்வரி, உதவி ஆணையர் விவேக் கண்ணன், ஆய்வாளர் விஜயகுமார், வட்டாட்சியர் திலீப்குமார் மற்றும் மீன்வளத்துறை துணை இயக்குநர் ஜான் பீட்டர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மீனவப் பிரதிநிதிகள் தங்களது காரசாரமான வாதங்களை முன்வைத்தனர்.
முழுமையான ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன்பே அமைச்சர் எந்த அடிப்படையில் மனிதக் கழிவுகள் என்று அவசர முடிவுக்கு வந்தார் என்றும், உயிரிழந்த மீன்கள் மற்றும் ஆற்று நீரின் மாதிரிகள் எந்தெந்த துறைகளால் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன என்ற உண்மை விவரங்களை வெளிப்படையாக அறிவித்து அமைச்சர் தனது கருத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கொந்தளித்தனர்.
இதற்குப் பதிலளித்த காவல் துணை ஆணையர் மகேஸ்வரி, தனக்குச் சிறிது கால அவகாசம் அளிக்குமாறும், மீன்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்களுடன் பேசி அடுத்த மூன்று நாட்களுக்குள் மீனவப் பிரதிநிதிகளுடன் உயர்மட்டக் குழுக் கூட்டத்தை நடத்தி உரிய தீர்வு காண ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். அதிகாரிகளின் இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட 8 கிராம மீனவ சங்கங்களின் நிர்வாகிகள், தங்களது தொடர் போராட்ட முடிவைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..! ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!