11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..! ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!
ராமேஸ்வரத்தில் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும்போது ஏற்பட்ட சம்பவம், தமிழக மீனவ சமூகத்தில் மீண்டும் ஒருமுறை கவலையை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அனுமதி பெற்று சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர். அப்போது ஒரு படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
சூறைக்காற்றின் தாக்கத்தாலும் வலுவான கடல் நீரோட்டத்தாலும் அந்தப் படகு கட்டுப்பாட்டை இழந்து இலங்கைக் கடற்பகுதிக்குள் திசை மாறிச் சென்றது.நெடுந்தீவு எனப்படும் டெல்ஃப்ட் தீவு அருகே உள்ள கடற்பகுதியில் படகு தரைதட்டி நின்றது. பவழப் பாறைகளில் மோதியதால் படகுக்கு ஓரளவு சேதம் ஏற்பட்டது. படகில் இருந்த பதினொரு மீனவர்கள் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கண்டுபிடித்தனர்.
மீனவர்களைப் பத்திரமாக மீட்ட பின்னர், சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டியதாகக் குற்றம்சாட்டி அவர்களையும் படகையும் கைது செய்தனர். மீனவர்கள் தங்களுடைய படகு பழுதடைந்ததால் தான் வழிதவறி வந்ததாகவும், வேண்டுமென்றே எல்லையைத் தாண்டவில்லை என்றும் விளக்கமளித்தனர். இருந்தபோதிலும் அவர்கள் நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் திடீர் மாற்றம்... 300 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்... தரை தட்டி நிற்கும் படகுகள்...!
11 தமிழக மீனவர்களை இலங்கையில் சிறையில் அடைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..! விளக்கிய TN FACT CHECK..!!