தலைவிரித்தாடும் ரவுடிகள் அட்டகாசம்... அலறி ஓடும் மக்கள்... EPS கடும் தாக்கு...!
தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து இருப்பதாக எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ரவுடிகள் அட்டகாசம், பாலியல் பிரச்சனைகள், பெண்களின் பாதுகாப்பு என பல விவகாரங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பாரிமுனை பகுதியில் ரவுடி கும்பல்கள் மோதி கொண்டதாக சம்பவத்தை குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது என்றும் சாடினார்.
இதையும் படிங்க: "பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்..." - பாயிண்ட்களை அடுக்கி பதிலடி கொடுத்த ஜி.கே.வாசன்...!
ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத ஸ்டாலின் அரசின் சாதனை என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம் என்றும் விமர்சித்து உள்ளார். தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: "எடப்பாடி புதுப்புது கால்களாக தேடி, தேடி விழுந்து வருகிறார்..." - உதயநிதி ஸ்டாலின் கிண்டல் ...!