×
 

"உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்": தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக மே தின வாழ்த்து!

உழைப்பின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் மே தினத்தை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தொழிலாளர் பெருமக்களுக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். பல நூற்றாண்டுகளாகத் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி, அடிமை விலங்கினை உடைத்தெறிந்து உழைக்கும் வர்க்கம் உரிமைகளை மீட்டெடுத்த நாளாக இந்த மே தினத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

தொழிலாளர்களின் சிறப்புகளைப் பற்றிப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய, "இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி! உருக்குப்போன்ற தன் கரத்தையே நம்பி ஓங்கி நிற்பவன் தொழிலாளி!" என்ற வரிகளை அவர் தனது செய்தியில் மேற்கோள் காட்டியுள்ளார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் தங்களது ஆட்சிக் காலங்களில் தொழிலாளர்கள் நலனுக்காகச் செயல்படுத்திய முத்தான திட்டங்களையும், அவர்களைத் தொடர்ந்து தனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் பெருமையோடு நினைவுகூர்ந்துள்ளார்.

"உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்; நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்" என்று உழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காட்டிய வழியில் தொழிலாளர்களின் வாழ்வு சிறக்க மீண்டும் ஒருமுறை தனது வாழ்த்துகளை அவர் உரித்தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: கோவை அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை! பிரதமர் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி சவால்!

 

இதையும் படிங்க: நாங்கள் நினைத்திருந்தால் மேல்முறையீடு செய்திருக்க முடியும்! கலைஞரின் மெரினா இடம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share