கோவை அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை! பிரதமர் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி சவால்!
திமுக ஆட்சியில் இருந்திருக்கலாம். ஆனால் கோவையில் ஆட்சி செய்தது அதிமுக கூட்டணி 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.
கோவையில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான என்.டி.ஏ (NDA) தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS), திமுக அரசுக்கு எதிராகத் தனது அரசியல் பலத்தைச் சீறும் முழக்கங்களுடன் பதிவு செய்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் அமர்ந்து பேசிய அவர், கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதைப் புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றியைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி பேசுகையில் 2021 சட்டமன்றத் தேர்தலில், கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் கூட திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்திருக்கலாம், ஆனால் கோவையில் ஆட்சி செய்தது அதிமுக கூட்டணிதான் எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான தனது இலக்கை அவர் ஆணித்தரமாக அறிவித்தார். அதிமுக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 210 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முழங்கினார்.
இதையும் படிங்க: திமுகவின் இரு சாதனைகள்! குடும்ப சொத்து உயர்வு, கடனில் மூழ்கிய தமிழகம்! கோவையில் பிரதமர் மோடி ஆவேசம்!
முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடிய அவர் திமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் மக்கள் துயரத்தை மட்டுமே சந்தித்துள்ளனர். ஒரு குடும்பத்தின் நலனுக்காக 8 கோடி மக்களைச் சுரண்டுவதே இந்த அரசின் நோக்கமாக உள்ளது. ஊழலும், நிர்வாகச் சீர்கேடும் மலிந்துவிட்ட இந்த அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் எனத் தெரிவித்தார்.
மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையையும், மாநிலத்தில் அதிமுகவின் செல்வாக்கையும் இணைத்து வெற்றிக் கூட்டணியாக அவர் முன்னிறுத்தினார். பிரதமர் மோடியின் ஆதரவுடன், தமிழகத்தை ஊழலற்ற மற்றும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம். டெல்லியின் ஆதரவும், தமிழக மக்களின் அன்பும் எங்களுக்கு உள்ளது என நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை கொடிசியா மைதானமே அதிரும் வகையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய இந்தப் பேச்சு, அதிமுக - பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி..!! கோவையில் பலத்த பாதுகாப்பு.. டிரோன்களும் பறக்க தடை..!!