×
 

எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

இதனால் கட்சி பிளவு வெளிப்படையாகத் தெரிந்துவிடும் என்பதால் கூட்டம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகிறார். பிரிந்து சென்ற தலைவர்களையும், கட்சிக்குள் அதிருப்தியுடன் செயல்படும் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்தன. அதிமுகவில் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம் எனச் சுட்டிக்காட்டி பல முக்கிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். 

மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன் போன்றோர் இதில் அடங்குவர். சிலர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் பதவி பெறும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். மரகதம் குமரவேல் மற்றும் விஜயபாஸ்கர்களுக்கு ஏற்கனவே பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் நீதிமன்றத்தில் இடைத்தேர்தலுக்கு அனுமதி பெற்று தேர்தலை சந்திக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்.

இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து திடீர் விலகல்! அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ. இ.எம்.ஆர்.ராஜா அறிவிப்பு!

இந்நிலையில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வழக்கமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படும். ஆனால் இந்த முறை அது நடைபெறவில்லை. எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருப்பதால், கூட்டம் கூட்டினால் அவர்கள் வராமல் போகலாம் என்ற அச்சம் உள்ளது. இதனால் கட்சி பிளவு வெளிப்படையாகத் தெரிந்துவிடும் என்பதால் கூட்டம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

செல்போன் மூலம் எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பட்ஜெட் விவாதத்தில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்றோர் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவான தொனியில் பேசி வருகின்றனர். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டுகொள்ளாத நிலை நீடித்தால், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கலாமா என்ற ஆலோசனையும் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற அதிமுக ஒற்றுமை அவசியம் என சில மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இந்த முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. சசிகலா தரப்புடன் டி.டி.வி. தினகரன் தென் மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அக்கட்சி பலவீனமடையும் வாய்ப்புள்ளது. கே.சி. பழனிச்சாமி உள்ளிட்டோரையும் மீண்டும் அழைக்க வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

விழுப்புரம் சண்முகம், கோவை எஸ்.பி. வேலுமணி போன்ற வலுவான தலைவர்கள் அதிருப்தியுடன் இருப்பது அல்லது வேறு கட்சிக்குச் செல்வது உள்ளாட்சித் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும். செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களுக்கு முன் பிரிந்தவர்களையும் அதிருப்தியாளர்களையும் அழைத்துப் பேச எடப்பாடி பழனிச்சாமி தயாராக உள்ளார்.

தற்போதைக்கு கட்சியை வலுப்படுத்துவதே முன்னுரிமை என்பதே அவரது திட்டம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒன்றிணைப்பு முயற்சி வெற்றி பெற்றால் அதிமுகவின் எதிர்கால அரசியல் போக்கு மாறக்கூடும் என்பது அரசியல் வட்டாரங்களின் கணிப்பு.
 

இதையும் படிங்க: 'சரக்கு' பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென எடப்பாடி சொன்ன 'நச்' பதில்..!! என்னவா இருக்கும்..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share