திமுக அறிக்கை ஒரு காப்பி! 525 வாக்குறுதிகளை விளாசித்தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளில் கால்வாசிகூட நிறைவேற்றவில்லை; ஒருமுறை ஏமாந்த மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள் என இபிஎஸ் ஆவேசம்!
திமுக இன்று வெளியிட்டுள்ள 525 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை, "அதிமுக-வின் திட்டங்களைக் காப்பியடித்துத் தயாரிக்கப்பட்ட அறிக்கை" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளார். தென் மாவட்டங்களில் தனது இரண்டாம் நாள் பிரசாரத்திற்காகத் திருநெல்வேலி வந்தடைந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாக விமர்சித்தார்.
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை முற்றிலும் அதிமுக-வின் சிந்தனையில் உருவான திட்டங்களைக் காப்பியடித்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாத அரசு என்பதற்கு இதுவே சான்று என்று இபிஎஸ் தெரிவித்தார்.
கடந்த 2021 தேர்தலின்போது திமுக அளித்த 525 வாக்குறுதிகளில் கால்வாசியைக் கூட இந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: #BREAKING: திமுக தேர்தல் அறிக்கை 2026: மகளிர் உரிமைத் தொகை ₹2000, 10 லட்சம் வீடுகள் - 15 அதிரடி வாக்குறுதிகள்!
கடந்த முறை திமுக-வின் பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஒருமுறை ஏமாந்துவிட்டார்கள். அதே தவறை மக்கள் மீண்டும் செய்ய மாட்டார்கள். திமுக-வின் இந்த 'சூப்பர் ஸ்டார்' வேடம் தேர்தலுக்குப் பிறகு கலைந்துவிடும் என்று அவர் எள்ளி நகையாடினார்.
களத்தில் எவ்வித மக்கள் செல்வாக்கும் இல்லாத திமுக, இதுபோன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு விளம்பர அரசியல் செய்கிறது. ஆனால், அதிமுக-வின் வாக்கு வங்கி வலுவாக இருப்பதைப் பார்த்து அவர்கள் பயந்து போயுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
கன்னியாகுமரி எல்லையில் தனது வாகனத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட பிறகும், சற்றும் தளர்வின்றித் தனது பிரசாரத்தைத் தொடர்ந்த எடப்பாடியார், தென் தமிழகத்தில் அதிமுக-விற்கு அமோக ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார். நாளை (மார்ச் 30) கடையநல்லூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் அவர் தனது சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையை ஹீரோ என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் வர்ணித்துக் கொண்டிருக்கும் வேளையில், உண்மையான ஹீரோக்களாகப் போகிறவர்கள் மக்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: திவ்யா சத்யராஜுக்கு சென்னை மேயர் பதவி? தொண்டாமுத்தூர் சீட்டை ஏற்காதது ஏன்?