×
 

இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

சினிமாவில் நடித்துவிட்டு எம்ஜிஆரை போலக் கனவு காண்கிறார்கள் என்று இதயக்கனி வெற்றி விழாவில் விஜயை மறைமுகமாக சாடிய எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில், டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 225 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 'இதயக்கனி' திரைப்படத்தைக் கண்டு ரசித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரையரங்கில் குழுமியிருந்தனர். படம் முடிந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆரின் தனிச்சிறப்புகளையும் அவரது அரசியல் வெற்றியையும் பட்டியலிட்டதுடன், தற்போது அரசியலுக்கு வந்துள்ள நடிகர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

எம்ஜிஆர் அவர்கள் நிஜமாகவே சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்தவர் என்றும், சினிமாவில் அரசியலைப் புகுத்தி வெற்றி கண்ட ஒரே தலைவர் அவர்தான் என்றும் இபிஎஸ் புகழாரம் சூட்டினார். மேலும், எம்ஜிஆர் தனது படங்களில் புகைப்பிடிப்பது போன்றோ அல்லது மது அருந்துவது போன்றோ ஒருபோதும் நடித்ததில்லை என்றும், தனது ரசிகர்கள் தவறான பாதைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால் மக்கள் அவரை 'வாத்தியார்' என அன்புடன் அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். "இன்று யார் யாரோ திரைப்படத்தில் நடித்துவிட்டு எம்ஜிஆரைப் போன்று கனவு காண்கிறார்கள், ஆனால் அந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது" என அவர் முழங்கினார்.

இதையும் படிங்க: அதிமுகவில் திடீர் திருப்பம்.... இரட்டை இலையை பிடித்தார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்திருப்பதாகவும், எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன் என்றும் தொடர்ந்து பேசி வரும் நிலையில், இபிஎஸ்ஸின் இந்தப் பேச்சு விஜய்க்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகவே பார்க்கப்படுகிறது. "எம்ஜிஆர் பெயரைச் சொல்பவர்கள் எல்லாம் அவரைப் போன்று ஆகிவிட முடியாது" என்று குறிப்பிட்ட இபிஎஸ், ஏழை எளிய மக்களுக்காக எம்ஜிஆர் செய்த தியாகங்களும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட புரட்சிகரமான திட்டங்களுமே அவரை இன்றும் மக்கள் மனதில் வாழ வைக்கிறது என்று உணர்ச்சிப் பொங்கப் பேசினார். இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக எம்ஜிஆரின் பாரம்பரியத்தை உரிமை கொண்டாடுவதில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share