×
 

"வாக்குறுதி என்னாச்சு?" கொளுத்தும் வெயில்.. நடுரோட்டில் போராடிய ஆசிரியர்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!

சம வேலைக்குச் சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.

“சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் முன்னெடுத்துள்ள மாபெரும் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

ஆட்சேபனைகளை மீறிக் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், தலைநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆசிரியர்களின் போராட்டம், இன்று மூன்றாவது நாளாக மேலும் தீவிரம் அடைந்துள்ளது. 2009-ஆம் ஆண்டிற்குப் பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்பு சேர்ந்தவர்களுக்கும் இடையே நிலவும் மிகப்பெரிய ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து ஆசிரியர்கள் உறுதியுடன் களத்தில் உள்ளனர். இன்று காலை முதலே 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதையும் படிங்க: பயணிகள் கவனத்திற்கு! நாளை மின்சார ரயில் சேவைகள் ரத்து! முழு விவரம் இதோ!

காவல்துறையினர் தடுத்த நிறுத்த முயன்ற போது, ஆசிரியர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாரிமுனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. வாகனங்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். காவல்துறையினர் பலமுறை கலைந்து செல்லுமாறு எச்சரித்தும், "எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நகர மாட்டோம்" என ஆசிரியர்கள் பிடிவாதமாக இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, சாலையில் அமர்ந்திருந்த 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைத் தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாகக் கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர். கைது நடவடிக்கையின் போது ஆசிரியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாகத் தலையிட்டுத் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் ஆவேசமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மயிலாப்பூரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: வாட்டர் கேனில் கடத்திய பெண் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share