சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!
மருதமலை கோயில் குடமுழுக்கில் சமஸ்கிரதத்திற்கு இணையாகத் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதாக அறநிலையத்துறை தெரிவித்ததை அடுத்து வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மொழிக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கி யாகசாலை பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை உறுதிபடத் தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிபதி முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
கோவையை அடுத்த மருதமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவை முழுமையாகத் தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, சுரேஷ்பாபு என்பவர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதேபோல, நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் விஜயராகவனும் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்துவது தொடர்பாகப் பிரத்யேக அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதேவேளையில், தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதி சிவாச்சாரியார்கள் சங்கத்தின் சார்பிலும் தனியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனுக்கள் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில், மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கின் போது, சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழிலும் வேள்விகள் நடத்தப்பட்டுத் தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் மூலமாகப் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்டத் தமிழ் திருமுறைப் பாடல்கள் பாடப்படும். யாகசாலையில் 36 குண்டங்களில் தமிழிலும், வேறு 36 குண்டங்களில் சமஸ்கிருதத்திலும் சம அளவில் வேள்விகள் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
இந்நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக இன்று மீண்டும் இறுதி விசாரணைக்கு வந்தன. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டபடி மருதமலை கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மொழிக்கும் முழு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு யாகசாலை பூஜைகளும் குடமுழுக்கும் சீரோடும் சிறப்புரோடும் நடத்தி முடிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் இந்தப் பதிலைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு என அனைத்து வழக்குகளையும் முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!