×
 

ஆன்லைன் டிரேடிங்கால் சீரழிந்த குடும்பம்.. ஆசை மகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

திருவள்ளூர் அருகே ஆன்லைன் டிரேடிங்கால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரூ.15 லட்சம் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாததால் மனம் உடைந்து தனது ஆசை மகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

உலகம் முழுவதும் போதை வஸ்துகள் மனிதருக்கு தரும் பேரழிவைப்போல், சூதாட்டங்களும் மனிதர்களின் வாழ்வை அழித்தே வருகின்றன. இதிகாசங்களில் இருந்தே சூதாட்டம் விளையாடும் பழக்கம் காணப்பட்டாலும், தற்போது அது பல வடிவங்களை எடுத்துள்ளது. சீட்டு விளையாடுவது, குதிரை பந்தயம், லாட்டரி சீட்டுகள் விற்பனை, 3 நம்பர் என அதன் வடிவங்கள் எத்தனை விதமாக மாறினாலும் அனைத்திலும், சராசரி ஏழை மக்களின் கனவை, ஆசையை பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை சிதைக்கும் தன்மை மட்டும் மேலோங்கி காணப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு, சீட்டு விளையாடுவது, குதிரை பந்தயம், லாட்டரி சீட்டுகள் விற்பனை, 3 நம்பர் போன்ற சூதாட்டங்களை தமிழகத்தில் தடை செய்துள்ளது. சூதாட்டங்களை போல் நம் வாழ்க்கையை சீரழிப்பது ஆன்லைன் ட்ரேடிங். ஒரு முறை நம்மை மேலே ஏற்றினால், மறுமுறை கீழே இறக்கி விடுகிறது. இதனால் பல குடும்பங்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். 

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (38). இவரது மனைவி வாணி. இவர்களுக்கு ஆறு வயதில் தஸ்விகா என்ற மகள் இருந்தார். லோகநாதன் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள கட்டுமான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆன்லைன் டிரேடிங் மூலம் செய்து வந்த தொழிலில் ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிந்தவர்களிடமும், கிரெடிட் கார்டு மூலமாகவும் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.

இதையும் படிங்க: தங்க புதையலே இருக்கு! ரூ.10 லட்சத்துக்கு அரைக்கிலோ தங்கம்.. ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்..!

இதனால் கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த லோகநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, காலை வீட்டை விட்டு வேலைக்கு செல்லும் அவர் இரவு வீட்டிற்கு வந்தாலும் வருவார் ஒரு சில நாட்களில் வராமலும் இருந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லை அதிகமாகவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான லோகநாதன் நேற்று தனது ஆறு வயது மகள் ஜஸ்வந்திகாவுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு 7 மணி ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் லோகநாதனின் மனைவி வாணி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் குழந்தையுடன் சென்ற கணவர் காணவில்லை என புகார் அளித்தார். 

இதனிடையே நேற்று இரவு திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து வந்த விரைவு ரயில் முன் பாய்ந்து ஆறு வயது மகளுடன் லோகநாதன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து  திருவள்ளூர் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆன்லைன் டிரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் ஆசை மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

இதையும் படிங்க: அடிச்ச எல்லா பந்துமே சிக்ஸ் தான்..!! கிரிக்கெட் விளையாடி அசத்திய எஸ்.பி வேலுமணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share