பூஜை அறையில் இருந்து பற்றிய தீ.. கொளுந்து விட்டு எரிந்த பங்களா வீடு.. உடல்கருகி இறந்த முதிய தம்பதி..!
சென்னை வளசரவாக்கம் அருகே பங்களா வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி முதிய தம்பதி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் நான்காவது தெருவில் ஸ்ரீராம் (50) எனும் ஆடிட்டர் வசித்து வருகிறார். இவரது மனைவி சியாமளா (45) மற்றும் மகன் ஸ்ரவன் (20). ஸ்ரீராமின் பெற்றோர் நடராஜன் (79) மற்றும் தங்கம். மூன்று தலங்கள் கொண்ட ஸ்ரீராமின் வீடு பெரும்பாலும் மரக்கட்டங்களால் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வீட்டிலிருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் குடும்பத்தினர் அனைவரும் செய்வது அறியாது தவித்தனர். வீட்டில் இருந்த வயது முதிர்ந்த தம்பதி சிக்கி கொண்டனர். கரும்புகை வெளியில் வரவே மற்றவர்களுக்கு தெரிந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறுவதற்குள் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: கொலை முயற்சி? மதுரை ஆதினம் அளித்த புகார்.. சிசிடிவி காட்சியை வெளியிட்ட போலீஸ்..!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமாபுரம் விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயல் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். ஒரு மணி நேரமாக போராடியும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படாததால் கூடுதல் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. அதற்குள் வீடு முழுவதும் தீப்பரவி அனைத்து பொருள்களும் எரிந்து சேதம் அடைந்தன.
விசாரணையில் வீட்டில் 3 பேர் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீராம் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து தப்பினார். கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. வீட்டின் முதல் தளத்தில் இருந்து குதித்து தப்பிய பண்ணிப்பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
வீட்டில் இருந்து முதியவர்களான நடராஜன் மற்றும் தங்கம் தீயில் கருகி உயிரிழந்தனர். ஒன்றரை மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்த நிலையில், வயதான தம்பதி பிணமாக மீட்கப்பட்டனர்.
தற்போது வளசரவாக்கத்தில் மழை பெய்து வருவதால், தீயை அணைக்கும் பணி கொஞ்சம் சுலபமாகியுள்ளது. எனினும் தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் பூஜை அறையில் இருந்து தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: புரோக்கர் எனக்கூறி வீடுபுகுந்த பெண்.. மயக்கமருந்து கொடுத்து அரங்கேற்றிய கொடூரம்..!