×
 

“முதல் மரியாதை இறைவனுக்கு மட்டுமே!” காஞ்சிபுரம் கோயில் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கோயில்களில் முதல் மரியாதை என்பது எப்போதும் தெய்வத்திற்கு மட்டுமே; சிறப்பு மரியாதைகளை எவரும் ஒருபோதும் சட்டப்பூர்வ உரிமையாகக் கோர முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் மிகத் தெளிவானத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் மடாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்டு வந்த ‘பஞ்ச முத்திரை’ மரியாதை நிறுத்தப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது போன்ற நிர்வாக முடிவுகளில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளே இறுதி முடிவெடுக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி கோவிலில், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம மடாதிபதிக்கு 1992-ஆம் ஆண்டு முதல் ‘பஞ்ச முத்திரை’ எனும் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் இந்த மரியாதை நிறுத்தப்பட்டதை எதிர்த்து அந்த ஆசிரமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ அகோபில மடம், நாங்குநேரி ஸ்ரீ வாணாமலை மடம், மைசூர் ஸ்ரீ பரகால ஜீயர் மடம் மற்றும் உடுப்பி ஸ்ரீ வியாசராயர் மடம் ஆகிய ஐந்து குறிப்பிட்ட மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே தற்போது சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆன்மீகத் தளங்களில் தனிநபர் மரியாதையை விட இறை வழிபாடே மேலானது எனச் சுட்டிக்காட்டினர்.

இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக்கு தடை கோரி வழக்கு: கொலீஜியம் மீது புகார்!

நீதிபதிகள் தங்களது உத்தரவில், “கோவில்களில் முதல் மரியாதை எப்போதும் மூலவர் தெய்வத்திற்குத்தான் உரியது. சிறப்பு மரியாதைகள் என்பது உரிமையல்ல; அதனை எவரும் தங்களது உரிமையாகக் கோரி வழக்குத் தொடர முடியாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், ஒரு மடாதிபதிக்கு மரியாதை வழங்குவது குறித்து இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், நிவாரணம் தேவைப்படுவோர் நீதிமன்றத்தை அணுகுவதற்குப் பதிலாக அறநிலையத் துறை அதிகாரிகளிடமே முறையிடலாம் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
 

இதையும் படிங்க: “மத்திய அரசு அளித்த மானியம் வருமானமல்ல!” - ஆவின் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share