×
 
☰

ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

இந்த ஊழல் டீல் முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா முதல்வர் விஜய் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கழக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டெண்டரை ரத்து செய்த தவெக அரசு, இன்றைக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு உச்சபட்சமாக ரூ.35 கொடுத்து வாங்குகிறது; இந்த ஊழல் டீலை முடிப்பதற்காகத்தான் பக்கத்து மாநிலத்திற்குப் பஞ்ச் டயலாக் முதல்வர் விஜய் பறந்து சென்றாரா? என்று திமுக இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, பொதுச்சந்தையில் உச்சக்கட்ட விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது மற்றும் விலைவாசி உயர்வு விவகாரங்கள் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் மிகக் கடுமையான சொற்களால் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கழக ஆட்சிக்காலத்தில் நியாயமான குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று அவதூறு பேசி டெண்டரை ரத்து செய்த இந்த சர்க்கஸ் அரசு, இன்றைக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் முழுமையான திறமையற்றவராக  இருக்கிறார் இந்த டம்மி முதலமைச்சர்.

இதையும் படிங்க: வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!

இப்படி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை - மழை பெய்யவில்லை - பஞ்சாப்பில் கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டு செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?

இந்த ஊழல் டீலை முடிப்பதற்காகத்தான் பக்கத்து மாநிலத்திற்குப் பறந்து சென்றிருக்கிறாரா நமது பஞ்ச் டயலாக் சி.எம்? ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அந்த இழப்பையும் அப்பாவி பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் தமிழக மக்களை வதைக்கவிருக்கிறது? 'மாற்றம், மாற்றம்' என்று வாய்ச்சவடால் பேசிவிட்டு, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: குழந்தைகளை தாக்குவதற்கு தாய்மாமன் தடியடி திட்டமா.? சொல்லுங்க CM..! உதயநிதி விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share