வைகை ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்... வெளியானது அதி முக்கிய எச்சரிக்கை...!
வைகை அணையின் நீர்மட்டம் 62.66 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேகமலை, வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தேனி வருசநாடு பகுதியில் வைகை ஆற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வருசநாடு-கண்டமனூர் பகுதியில் வேளாண் நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது சாலையில் வெள்ளநீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, வைகை அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 12,589 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் ஒட்டுமொத்த நீர்மட்டம் 71 அடியாக உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 62.66 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பு 4132 மில்லியன் கனஅடியாகும்.
இதனால் வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 கன அடியை விரைவில் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1,199 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், நீர்வளத்துறை சார்பில் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்கக்கூடாது என்றும், ஆடு, மாடுகளை குளிக்க வைப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோர முகம் காட்டிய பாக்.,!! வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மரணம்..!!
மேலும் இந்த மழையானது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்பதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு கிடுகிடுவென உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் தங்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கக்கூடும் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்கும் படியும் நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: காலையிலே வந்தது அலர்ட்... இந்த 10 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை...!