×
 

"அப்பா அதிமுக... பெரியப்பா திமுக..."பாரம்பரிய அரசியல் வாரிசை தவெக-வுக்கு இழுத்த முதலமைச்சர் விஜய்!

திமுக மற்றும் அதிமுகவின் ஸ்தாபக குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமியின் மகனும், முதல்வர் விஜய்யின் கல்லூரி வகுப்புத் தோழனுமான கே.ஏ.கே. முகிழ் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய திருப்பமாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஸ்தாபகத் தலைவர்களுடன் கரம் கோர்த்துப் பயணித்த பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமியின் மகன் கே.ஏ.கே. முகிழ், தற்பொழுது அதிமுகவில் இருந்து விலகி தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் இந்த இணைப்பு மிக முக்கிய உள்கட்டமைப்பு மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதன் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்தால், பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுகவைத் தொடங்கிய காலகட்டத்தில், அவருடன் தூணாக நின்ற ஈ.வி.கே. சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், என்.வி. நடராஜன் ஆகியோருடன் கே.ஏ. மதியழகனும் ஒரு முக்கிய முகமாக விளங்கினார். அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் அமைச்சரவைகளில் முக்கிய அமைச்சராக வளம் வந்தவர் கே.ஏ. மதியழகன். இவருடைய தம்பிதான் கே.ஏ. கிருஷ்ணசாமி. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கிய போது, அவருக்குத் துணையாக நின்று கட்சியை வளர்த்தவர்களில் கே.ஏ. கிருஷ்ணசாமி மிக முக்கியமானவர். அதிமுக அமைச்சரவையில் பலமுறை அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர்.

இத்தகைய மாபெரும் அரசியல் பாரம்பரியமிக்கக் குடும்பத்தில் இருந்து வந்த கே.ஏ.கே. முகிழ், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து அதிமுகவில் மாநில இளைஞரணிச் செயலாளர், 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம், வேலூர், மதுரை ஆகிய தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, கடந்த 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை அதிமுகவிலேயே தீவிரமாகப் பயணித்து வந்தார்.

இதையும் படிங்க: தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த 'இந்தியா' கூட்டணியில் திமுக, தவெக இணைய வேண்டும்! தொல். திருமாவளவன் பேட்டி!

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்குத் தனது குடும்பத்தினருடன் சென்ற கே.ஏ.கே. முகிழ், தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் அவர்களை நேரில் சந்தித்துக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுத் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், ஒரு சுவாரசியமான விபரம் என்னவென்றால், புதிய மேலிடப் பொறுப்பாளராகத் தவெகவில் இணைந்துள்ள முகிழ், முதலமைச்சர் விஜய் அவர்களின் கல்லூரி காலத்து வகுப்புத் தோழன்  என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரியப்பா மற்றும் தந்தை என இருவருமே திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் முகவரிகளாகவும், அமைச்சர்களாகவும் இருந்த சூழலில், அவர்களது வாரிசான முகிழ் தற்பொழுது தவெகவின் புதிய அரசியல் உள்கட்டமைப்பிற்குள் நுழைந்திருப்பது, கோட்டை வட்டாரங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கங்களில் மாபெரும் விவாத அலைகளையும் அரசியல் பரபரப்பையும் அசுர வேகத்தில் கிளப்பியுள்ளது.
 

இதையும் படிங்க: சாட்சிகளை அச்சுறுத்துகிறார் அமைச்சர்! ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சிபிஐ இயக்குநரிடம் திமுக மணு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share