அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
அரியலூரில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும், தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் தா. பழூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அரியலூரில் பதிவாகியுள்ள பண மோசடி வழக்கு குறித்து விளக்கம் அளித்தார். காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கைது செய்யப்பட்டவர் முன்னாள் அமைச்சரின் உதவியாளர் என்று குறிப்பிடப்படவில்லை என்றும், சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொண்டார் என்றுதான் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், குறிப்பிட்ட அந்த வேலைக்கு அரசு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும், அது டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் பணியாகும் என்றும் அவர் விளக்கினார்.
சட்டமன்றப் பேரவையில் தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்துத் தான் தொடர்ந்து விமர்சித்து வருவதால், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் நோக்கில் இந்த செய்தி திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகச் சிவசங்கர் குற்றம் சாட்டினார். மேலும், தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் இந்தத் தவறான தகவலைச் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகவும், இதனை நிறுத்திக்கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளூர் மக்களுக்கு வேலை; ஏழைகளுக்கு சொந்த வீடு! அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு அமைச்சர் பிரபு உத்தரவு!
தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத்தில் கடந்த காலங்களில் முதலமைச்சர்களாக இருந்த பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எவ்வாறு கண்ணியத்துடன் விவாதங்களை நடத்தினார்கள் என்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். முதல்வருக்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பவர்கள் கடந்த காலச் சட்டமன்றக் குறிப்புகளை அவருக்குச் சுட்டிக்காட்டி உதவ வேண்டும் என்றும், தமிழகத்தின் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற எதார்த்தப் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!