7 வயது சிறுமி எங்கே?... தமிழகமே எதிரொலிக்கும் ஒற்றை கேள்வி... 3வது நாளாக தேடுதல் வேட்டை...!
செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை மூன்றாவது நாளாக தேடும் போலீசார்
கடந்த மூன்று நாட்களாக சிறுமி பற்றி எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் போலீசார் தீவிரமாக சிறுமியை தேடும்படியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலம்பூண்டி பகுதியில் வசித்து வரும் வடிவேலுவின் 7 வயது மகள் ஹேமாவதி, அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு ஏழு வயது நிறைவடைந்ததை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சிறுமி தனது தாயுடன் வீட்டுக்குள்ளும், தந்தை வீட்டின் வெளியே உள்ள தாழ்வாரத்தில் உறங்கியுள்ளனர். காற்றுக்காக வீட்டின் பின்பக்கக் கதவை திறந்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: லெட்டர் பேட் கட்சியா அதிமுக..? EPS குறித்து அவதூறு..! அமைச்சர் நிர்மல் குமாருக்கு நோட்டீஸ்..!!
மறுநாள் அதிகாலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அக்கம்பக்கத்திலும் தேடியுள்ளனர். பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைக் கண்டுபிடிக்கத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
சிறுமியைத் தேடும் பணிக்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோப்பநாய், ட்ரோன் மூலம் தேடுதல்:
சிறுமி காணாமல் போன வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, விவசாய நிலங்கள், நீர்நிலைகள், மலைப்பகுதிகள் மற்றும் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களிலும் போலீசார் தேடி வருகின்றனர்.
மோப்பநாய் மற்றும் ட்ரோன் கேமராக்களின் உதவியுடனும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து சிறுமி சென்றிருக்கக்கூடிய வழித்தடங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கவலையில் கிராம மக்கள்:
சிறுமி காணாமல் போய் பல நாள்கள் ஆகியும் அவரைப் பற்றிய உறுதியான தகவல் கிடைக்காததால், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி எங்கு சென்றார், அவர் காணாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.
பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே சிறுமி காணாமல் போன சம்பவம் ஆலம்பூண்டி கிராம மக்களிடையே பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் குடும்பத்தினரும், கிராம மக்களும் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஐரோப்பிய தலைவர்களுக்கு டார்ச்சர்!! எலான் மஸ்க் மீது பிரான்ஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு! அந்நியத் தலையீடு!