×
 

முக்கியமான மசோதா மிஸ்ஸிங்.. ஆளுநர் ஒப்புதல் கொடுத்த 4 மசோதா என்னனு தெரியுமா?

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 18 மசோதாக்களில் நான்கு நிதித்துறை சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கடந்த மார்ச் 14 ஆம்  தொடங்கி ஏப்ரல் 30 வரை நடைபெற்றது. மார்ச் 14 ஆம் தேதி நிதிநிலை அறிக்கையும், அடுத்த நாளான மார்ச் 15ந்தேதி  வேளாண்மை நிதிநிலை அறிக்கைகள்  தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்ஜெட்கள் மீது பொது விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து,  நீர்வளம், இயற்கை வளங்கள் துறைகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்பட அனைத்து  துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றது.  இடையிடையே முதலமைச்சர் ஸ்டாலின் விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

குறிப்பாக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புர ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிந்து, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. 

இதையும் படிங்க: அன்னைக்கு இனிச்சது.. இன்னைக்கு வலிக்குதா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்வதற்கான சட்ட முன்வடிவுகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக பணம் வசூலிப்பதை தடுக்க வகை செய்யும் புதிய சட்ட திருத்த மசோதாவை கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார். 

அதே போல உயர்க்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் கலைஞர் பல்கலைக்கழக சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். அதே போல மருத்துவ கழிவுகளை கொட்டினால் தடுப்புக்காவல் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா உள்ளிட்ட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 18 சட்டமசோதாக்கள்;

*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி ஒதுக்க (எண்2) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி ஒதுக்க (எண்3) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி ஒதுக்க (எண்4) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி ஒதுக்க (எண்5) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (வலுக்கட்டாய நடவடிக்கைகளைத் தடுத்தல்) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக (திருத்த) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள்(திருத்த) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் (இரண்டாம் திருத்த) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சிகள் (இரண்டாம் திருத்த) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (மூன்றாம் திருத்த) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசைப்பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்த) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்த) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு பதிவுச் (தமிழ்நாடு திருத்த) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (திருத்த) சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு
*2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டமுன்வடிவு

ஆகிய 18 மசோதாக்கள் தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டன. இவற்றில் நிதித்துறை தொடர்பான நான்கு மசோதாக்கள் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலைப் பெற்றுள்ளன. ஒப்புதல் பெற்ற மசோதாக்கள் நிதித்துறை சார்ந்த இந்த நான்கு மசோதாக்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பான சட்ட முன்வடிவுகளாகும். இவை மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் செலவினங்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது, தமிழக அரசின் நிதி நிர்வாகத்திற்கு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.

மொத்தம் 18 மசோதாக்களில், மீதமுள்ள 14 மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளன. இவற்றில், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவும் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சரே நேரடியாக துணை வேந்தராக இருப்பதற்கான ஷரத்துக்கள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாக்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: துணை வேந்தர்கள் தடுக்கப்பட்டார்களா? ஆளுநர் சும்மா சொல்லவில்லை.. கொந்தளித்த தமிழிசை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share