×
 

விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

போதிய பெரும்பான்மை (118 இடங்கள்) இல்லாத சூழலில் விஜய் ஆட்சி அமைக்கக் கோருவது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என புதுவை அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவு முற்றிலும் சரியானது எனப் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறி குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

பெரும்பான்மை குறித்த விஜய்யின் மழுப்பலான பதில்கள் ஆளுநரைத் திருப்திப்படுத்தவில்லை. போதிய எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க உரிமை கோருவது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்தச் சூழலில் அவரை அழைக்காத ஆளுநரின் முடிவு பாராட்டுக்குரியது என அவர் கூறினார்.

 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக வாய்மொழியாக மட்டுமே கூறிவிட்டு, அதற்கான எழுத்துப்பூர்வ ஆதாரங்களைச் சமர்ப்பிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழகத்தைப் போலவே புதுவை அதிமுக-வும் தவெக-விற்கான ஆதரவை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

இதையும் படிங்க: முடிவெடுக்காமல் இருக்கும் ஆளுநர்..!! விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும்..!! திருமா வலியுறுத்தல்..!!

ஏற்கனவே அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி ஆதரவு இல்லை எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது புதுவை அதிமுக-வும் விஜய்க்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது தவெக-விற்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் சி.வி. சண்முகம் தலைமையில் சில எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அதிமுக தலைமை இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவெக தரப்பில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து ஆளுநரை மீண்டும் சந்திக்கத் திட்டமிட்டு வரும் வேளையில், இந்த விமர்சனங்கள் தமிழக அரசியலில் அனலைக் கூட்டியுள்ளன.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்! காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி காட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share