×
 

என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டது போல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

மேற்காசியப் பகுதியில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் உலக அளவில் எரிபொருள் விநியோகத்தை பெரிதும் பாதித்துள்ளது. அமெரிக்கா விடுத்த போர் நிறுத்த அழைப்பை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் பதற்றம் தணியாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக, உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த ஜலசந்தி வழியாக உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் நடைபெறுவதால், பல நாடுகள் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு விநியோகம், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா..?? வாகன ஓட்டிகளே.. பயப்பட வேண்டாம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??

நாட்டில் எரிபொருள் இருப்பை உறுதி செய்வதற்கான திட்டங்கள் குறித்து மத்திய அரசு ஏற்கெனவே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. “நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளது”, “கொரோனா காலத்தைப் போல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்பன போன்ற வதந்திகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் பங்குகளில் அதிக அளவில் எரிபொருள் நிரப்ப முயற்சிப்பதும் காணப்படுகிறது. இந்த வதந்திகளுக்கு மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார். “லாக்டவுன் போடப்படும் என்று பரவும் வதந்திகள் முற்றிலும் தவறானவை.

மத்திய அரசிடம் இத்தகைய எந்தத் திட்டமும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். தற்போதைய சூழலில் பொறுமையுடனும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் இருப்பது அவசியம். எரிபொருள் விநியோகம் தடைபடாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மோடி அரசு எடுத்துள்ளது. சவாலான சூழலை எதிர்கொள்ள நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் பூரி மேலும், இத்தகைய வதந்திகளைப் பரப்புவது பொறுப்பற்ற செயல் என்றும், இது மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார். நாட்டின் உள்நாட்டு எரிபொருள் இருப்பு பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும், அரசு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்தியா போன்ற எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்த நாடுகள் இத்தகைய உலகளாவிய நெருக்கடியில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனினும், மத்திய அரசின் உறுதியான நிலைப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. பொதுமக்கள் வதந்திகளுக்கு ஆளாகாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்பி, அமைதியாக இருக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share