நாளை வெளியாகிறது குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு..!! 10,000 காலி பணியிடங்கள் எதிர்பார்ப்பு!!
இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (அக்டோபர் 6) தனது இணையதளத்தில் வெளியிட உள்ளது. தேர்வு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டின் அட்டவணையில் இடம்பெற்றுள்ள ஆறு தேர்வுகளில் ஐந்துக்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவற்றில் மூன்று தேர்வுகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள இரண்டு விரைவில் நடைபெற உள்ள நிலையில், இறுதியாக குரூப்-4 அறிவிப்பு வருகிறது. இந்தத் தேர்வில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), கிராம நிர்வாக அலுவலர், வரைவாளர், பில் கலெக்டர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இடம்பெறும்.
2024 முதல் பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் குரூப்-சி நிலைப் பணியிடங்களும் இந்தத் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: மோடி–சுவிஸ் அதிபர் சந்திப்பு! இந்தியர்களுக்கு வரப்போகும் முக்கிய வாய்ப்புகள்! முக்கிய திட்டங்கள்!
நகர்ப்புற உள்ளாட்சிகளில் குரூப்-சி பதவிகளில் அதிக எண்ணிக்கையில் காலி இடங்கள் இருப்பதால், இவை அனைத்தும் குரூப்-4 கீழ் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நாளை வெளியாகும் அறிவிப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில் சுமார் 4,662 இடங்களும், அடுத்த சுழற்சியில் சுமார் 5,000-ஐத் தாண்டிய இடங்களும் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இருமடங்கு அளவுக்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
பெரும்பாலான பதவிகளுக்கு அடிப்படை கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி. சில பதவிகளுக்கு மட்டும் பட்டப்படிப்பு தேவை. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு தொழில்நுட்பத் தேர்ச்சியும் அவசியம். இருப்பினும், 10 ஆம் வகுப்பு தகுதியிருந்தாலும் முதுகலை மற்றும் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே ஏற்கப்படும். வயது வரம்பு பொதுவாக 18 முதல் 32 வரை (சில பதவிகளுக்கு மாறுபாடு உண்டு; கிராம நிர்வாக அலுவலருக்கு குறைந்தபட்சம் 21). முழுமையான விவரங்கள் நாளை அறிவிப்பில் வெளியாகும். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கும் இந்த அறிவிப்பை தேர்வர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!