×
 

முறையாக திட்டமிடாததால் ரூ.31 கோடி வீணடிப்பு?! கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கத்தில் குழப்பம்!

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், 31 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்க பணிகள், சரியான திட்டமிடல் இன்றி நடந்து வருவதால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையின் முக்கிய போக்குவரத்து மையமான கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கத் திட்டம் சரியான திட்டமிடல் இல்லாமல் நடைபெறுவதால், ரூ.31.25 கோடி மதிப்பிலான மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள், பல்வேறு நிர்வாக சிக்கல்களால் எதிர்பார்த்த பலனை அளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கிண்டி ரயில் நிலையம், மெட்ரோ ரயில், மாநகர பேருந்து நிலையங்கள் ஆகியவை ஒரே பகுதியில் இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையம் அருகே சாலை குறுகலாக இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், 60 அடி அகலமுள்ள சாலையை 100 அடியாக விரிவாக்கவும், ரேஸ்கோர்ஸ் பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

இந்தத் திட்டத்திற்காக உலக வங்கி, மாநில உள்கட்டமைப்பு நிதி மற்றும் மாநகராட்சி நிதி மூலம் ரூ.31.25 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், சாலை விரிவாக்கத்திற்கு முன்பாக அகற்றப்பட வேண்டிய ஆக்கிரமிப்புகளில் இதுவரை சுமார் 30 சதவீதம் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அரசு மீட்டெடுத்த ரேஸ்கோர்ஸ் நிலப்பகுதியை திட்டத்திற்காக முழுமையாக ஒப்படைக்காததால், பணிகள் குறுகிய இடத்திலேயே நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: தலைமை செயலகமாக மாறும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்!! ரூ.350 கோடியில் பிரமாண்ட திட்டம்!

இதனால், சாலையை விரிவுபடுத்தாமல் நடைபாதை அகலம் அதிகரிக்கப்படுவதாகவும், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வடிகாலுக்கு அருகே புதிய வடிகால் அமைக்கப்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக சில இடங்களில் சாலையின் அகலம் மேலும் குறைந்து, போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டத்தில் நடைமேம்பாலம், லிப்ட், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், புதிய வடிகால், மின்சார மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள், மின்சார வாகன சார்ஜிங் வசதி, பசுமைப் பகுதிகள் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இடம்பெற உள்ளன. இருப்பினும், பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாததே பணிகளில் தாமதத்துக்கும் குளறுபடிகளுக்கும் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், ஆட்சி மாற்றம், அதிகாரிகள் மாற்றம் மற்றும் நிர்வாக அனுமதிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர். பழைய வடிகாலுக்கு அருகே புதிய வடிகால் அமைப்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், நடைமேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: ஹை அலர்ட்! சென்னை, மதுரைக்கு வெப்பஅலை ஆபத்து!? ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் பகீர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share