குடியரசு தின விழாவில் கலந்துக்க வாங்க!! நீலகிரி தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு? யார் அந்த இந்திராணி!
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக, கூடலூர் சேர்ந்த தேயிலை தோட்ட பெண் தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்து, அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் சளிவயல் நெல்லிகுன்னு பகுதியைச் சேர்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளி இந்திராணிக்கு, டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். இது அவருக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திராணி ஒரு சாதாரண தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளி. அங்குள்ள தனியார் எஸ்டேட்டில் தினசரி வேலை செய்து வருபவர். அவரது கிராமம் மிகவும் பின்தங்கிய, கடைக்கோடி பகுதியாகும். அங்கு தபால் துறை ஊழியர் சென்று, ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பிதழை அவரிடம் கொடுத்தார்.
அழைப்பிதழைப் பெற்ற இந்திராணி மகிழ்ச்சியுடன் கூறியதாவது: "நான் ஒரு சாதாரண தேயிலைத் தோட்டத் தொழிலாளி. என் கிராமம் மிகவும் தொலைவிலுள்ள பின்தங்கிய இடம். அங்கு வசிக்கும் எனக்கு ஜனாதிபதியிடமிருந்து குடியரசு தின விழாவுக்கு அழைப்பு வந்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது."
இதையும் படிங்க: 2026ல் குடியரசு தின அணி வகுப்பு!! சிறப்பு விருந்தினர் யார் யார்? வெளியானது அப்டேட்!
இந்த அழைப்பு, நாட்டின் சாதாரண மக்களையும் கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகம் எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்டமான அணிவகுப்பு மற்றும் விழாவில் இந்திராணி போன்றவர்கள் பங்கேற்பது, நாட்டின் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை வெளிப்படுத்தும் அரிய நிகழ்வாக அமையும்.
இந்த செய்தி தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணியின் இந்த அனுபவம், கடின உழைப்பாளர்களின் பங்களிப்பை நாடு மதிப்பதை நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு மறைமுகமாக உதவும் பாஜக!! ஜனநாயகன் சர்ச்சையின் மற்றொரு பின்னணி! அரசியலில் சகஜமப்பா!