×
 

சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை மற்றும் நீலகிரி கோவையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள தினசரி அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 20 மி.மீ (2 செ.மீ) மழையும், சென்னை மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக அரியலூரில் 38.5 டிகிரி செல்சியஸும், சமவெளிப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாகக் கோவை விமான நிலையத்தில் 22.6 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

மழை முன்னறிவிப்பைப் பொறுத்தவரை, இன்று (ஆகஸ்ட் 23) மற்றும் நாளை (ஆகஸ்ட் 24) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

இதையும் படிங்க: மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

குறிப்பாக ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் எச்சரிக்கையாக, தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 27 வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதேபோல் மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளிலும் காற்று தீவிரமடைய வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட தினங்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share