23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் 23 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மாலை 4:00 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கவும், சாலைகளில் வழுக்கும் தன்மை ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிப்பு உண்டாகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, வேலூர், தென்காசி, விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடி சத்தம் கேட்கும் போது திறந்தவெளியில் இருப்பதைத் தவிர்க்கவும், மரங்களின் அடியிலோ அல்லது மின்கம்பங்கள் அருகிலோ தஞ்சம் அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள தேவையற்ற மின்சாதனங்களின் இணைப்பைத் துண்டித்து வைக்குமாறும், நீர்நிலைகளில் குளிப்பது மற்றும் படகு சவாரி செய்வதைத் தவிர்க்குமாறும் பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!